"நம்முடைய தேவைகளைத் தீர்மானிப்பதற்கு முன்பு, நமது கையிருப்பு வளங்களை மனதில்கொள்ள வேண்டும். மேலும், அவ்வளங்களைத் தகுந்தவாறு கையாள வேண்டும். மனித ஆற்றல் அதிகப்படியாகவும் எளிதாகவும் கிடைக்கிற இடத்தில், தூரத்து மனிதர்களை வரவழைத்து உழைப்பு பெறுவது எவ்வகையிலும் பொருத்தமற்றது. வேலைவாய்ப்பின்மை மற்றும் குடியிருப்புப் பற்றாக்குறைகள் பெருகியிருக்கும் ஒரு தேசம், தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இன்னுமும் ஆலை உற்பத்தியைத் தான் நம்பியுள்ளது என்பதை ஏற்கவே முடியவில்லை.
நம்மைச் சுற்றியுள்ள மூலவளங்களிலிருந்து முழுமையானப் பயன்களைப் பெறுதலே அறிவியல்பூர்வ அணுகுமுறை. உதாரணமாக, மூங்கிலிலிருந்து காகிதம் செய்யப்பட்டால் அதற்கு ஒற்றைப்பயன்பாடு மட்டுமே. அதே மூங்கிலை கூரை, பாய், அரிதட்டு, கூடை, வீட்டுபயோகப் பொருட்கள் என பலவகைப் பயன்பாடாக்கலாம். இதே ஒப்பீட்டை நாம் பனை மரத்துக்கும் கரும்புக்கும் பொருத்திப்பார்க்க முடியும். வளங்களை அறிவியல்பூர்வமாகப் பயன்படுத்தும் வகையில் நம் வாழ்க்கை அமைந்துவிட்டால் நம் கிராமங்கள் ஒவ்வொன்றாகத் தானிழந்த இறைமையை மீண்டும் அடைந்துவிடும்"
- ஜே.சி.குமரப்பா (கிராமியப் புரட்சி நூலில்...)
குமரப்பா பற்றிய கட்டுரைத்தொகுதிகளை தமிழக ஆளுமைகள், இந்திய ஆளுமைகள், உலக ஆளுமைகள் என வகைபிரித்து தனித்தனிப் புத்தகங்களாக தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிட முனைந்த நீள்முயற்சியின் முதல்புத்தகம் "டிராக்டர் சாணி போடுமா?". குமரப்பா பற்றிய பத்து முக்கியத் தமிழாளுமைகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்தது அப்புத்தகம்.
அதனைத்தொடர்ந்து குமரப்பாவின் தத்துவங்களைச் செயல்படுத்திய இந்திய அளவிலான சாட்சி ஆளுமைகள் குமரப்பா பற்றியும் அவருடைய இறைப்பொருளியில் மற்றும் அமைதிப்பொருளாதாரம் பற்றின கூட்டுக்கட்டுரைகளின் தொகுப்பே " கிராமியப் புரட்சி" புத்தகம். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் பெற்றுவரும் இப்புத்தகம் விரைவில் அச்சுநூலாக வெளியீடு அடையும்.
குமரப்பாவின் துல்லியக்கணிப்புகள், இயற்கைபற்றிய அறிவியல்நோக்கு, இறைமைப் பொருளாதாரம், அமைதிக் கொள்கைகள், தற்சார்புக் கோட்பாடுகள், சாட்சியிடங்கள், முன்னெடுப்பு இயக்கங்கள், கல்விக்கருத்துகள் மற்றும் காந்தி- வினோபா- குமரப்பா கருத்தொற்றுமைகளின் தரிசனங்கள்... என அனைத்தையும் உள்ளடக்கியப் புத்தகப்படைப்பாக உருப்பெற்றுள்ளது 'கிராமியப் புரட்சி'. செயல்வழிச் சாத்தியமடையும் அறவழிக் கருத்துக்களுக்கான சாட்சியம் இந்நூல்.
Be the first to rate this book.