கிராமங்கள் என்பது துரட்டிக் கம்புடன் ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்வது, பள்ளிக்கூட மணியடித்தவுடன் சிறுவர்கள் கூட்டமாக ஓடிச்சென்று மூத்திரம் பெய்வது போன்ற காட்சிகளில் அல்ல; அசல் கிராமங்களை அதுவும் அறுபது எழுபது வருடங்களுக்கு முன் உள்ள இந்தத் தலைமுறை அறியாத கிராமச் சித்திரங்களை வெகு அற்புதமாக இந்த நூலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் சோ. தர்மன். இதிலுள்ள கட்டுரைகளை ஒரு சிறுகதையைப் போல வாசிக்கலாம்; தொடர்ந்து நாவலைப் போலும் வாசிக்கலாம். நம்முன் இருக்கும் நாம் பார்க்காத, கேட்காத சம்பவங்கள் ஒரு புதிய திறப்பை நமக்குக் காட்டுகின்றன. எத்தனை விதமான கலாச்சாரச் சடங்குகள், எத்தனை விதமான வாழ்வியல், எளிய மருத்துவ முறைகள், நாம் அறியாத பறவைகள், செடிகள், கொடிகள், நாடி வரும் நாடோடிக் கூட்டங்கள், கிராமத்துச் சனங்களிடம் குடிகொண்டிருந்த வாழ்வியல் அறங்கள் போன்றவற்றின் மூலம் வாசிக்க வாசிக்க நம்மைப் புதிய ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று, வியப்படைய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் சோ. தர்மன்.
கிராமத்தை எழுதுவது என்பது கிராமத்தின் அன்றாடங்களை எழுதுவது அல்ல; மாறாகக் கிராமத்தின் அகத்தையும் கிராம மக்களின் ஆன்மாவையும் எழுதுவது. ஊடகங்கள் காட்டும் கிராமம் கண்களோடு மட்டுமே தொடர்புடையது, ஆனால் இலக்கியவாதியும் சம்சாரியுமான சோ. தர்மன் காட்டும் கிராமம் கண்களுக்கு அப்பால் ஊடுருவி, அகத்தைத் தொடுவது மட்டுமல்லாமல், நம்மை வியப்படையவும் வைக்கிறது. இந்தக் 'கிராமத்துச் சித்திரங்கள்' நூலை வாசித்த பிறகு நீங்கள் பார்த்த, பார்க்கப் போகிற கிராமங்களை வேறு கோணத்தில் காண்பீர்கள் என்பது நிச்சயம். சோ. தர்மன் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
Be the first to rate this book.