தமிழ்ச் சிந்தனை உலகில் பெளத்தச் சிந்தனை முக்கியமான பகுதி. பெளத்தம் குறித்த பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று இது. ஆனந்த குமாரஸ்வாமி, ஐ.பி.ஹார்னர் ஆகியோர் பௌத்த மூலாதாரங்களைத் தொகுத்து, அறிமுகம் எழுதி, கோதம புத்தரின் வரலாற்றையும் போதனைகளையும் சீர்பட எடுத்துரைக்கும் விதமாக இந்நூலினை இயற்றியுள்ளனர். இதனை வாசிப்பது புத்தரின் வரலாறு, போதனைகள் குறித்த ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும்; பழம் பெளத்த ஆதார நூல்களில் அறிமுகம்பெற நல்லதொரு தொடக்கமாக அமையும்.
தமிழ்நாட்டில் தமிழ் பெளத்த மறுமலர்ச்சியைச் சேர்ந்த ஒரு போக்கினரும், திராவிட இயக்கத்தினரும் பௌத்தத்தை மதம் என்கிற அர்த்தத்துக்கு வெளியே, பௌத்தம் ஒரு பகுத்தறிவுக் கொள்கை, அறிவுநெறி என்றும்; புத்தர் ஒரு சாதி எதிர்ப்பாளர் என்றும் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த நூல் இதற்கு மாறான திசையில் செல்கின்றது என்றாலும், பௌத்தம் குறித்த ஆழ்ந்த வாசிப்பிற்கு அழைத்துச் செல்லும். தமிழ்ச் சூழலில் விவாதங்களை ஊக்குவிக்கவும் கூர்மைப்படுத்தவும் உதவும்.
Be the first to rate this book.