பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்ற அச்சுறுத்தும் வரலாறும் ஜெர்மனிக்கு உண்டு. இன்று வரை ஹிட்லர் ஒரு பயங்கரக் கனவாகவே நீடிக்கிறார்.
அது போன்றே உலகம் வியந்த – உலகத்தின் சிந்தனைப் போக்கைத் திசை திருப்பிய இரண்டு ஜெர்மானியர்கள் உண்டு. ஒருவர் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிவித்த கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ்); மற்றொருவர் பிரபஞ்ச வெளியின் இயக்கங்களைத் தன் வித்தக ஞானத்தால் கண்டறிந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன்.
ஹிட்லர், கார்ல் மார்க்ஸ், ஐன்ஸ்டைன் – வரலாறு மறக்க முடியாத பெயர்கள் இவை.
இத்தகைய ஒரு பின்புலம் கொண்ட நாட்டின் கலை, இலக்கியம், அறிவியல், நிலவியல், அடிப்படைப் பண்பாடுகள் அறியத் தக்கவையும் ஆராயத்தக்கவையும் ஆகும். அருட்செல்வர் மொழிபெயர்ப்பு மையம் உலக நாடுகளை அறிமுகம் செய்யும் ஒரு நோக்கையும் தன் இலக்காகக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் முதலில் வெளி வந்தது ஆஸ்திரேலியா. இரண்டாவது நூலாக ஜெர்மனி வெளிவருகிறது.
இலக்கியத்தில் ஆழங்கால் பட்ட கல்வியாளர் பேராசிரியர் முனைவர் சொ. சேதுபதி. கட்டுரையாளராக, கவிஞராக, பாரதி ஆய்வாளராக, பத்திரிகையாளராகப் பன்முகம் காட்டும் பேராசிரியர் இவர். கோவை, பொள்ளாச்சி (என்.ஜி.எம். கல்லூரி), திருச்சி எனப் பல கல்லூரிகளில் பணியாற்றிய பின் இப்போது இத்தேனீ புதுவை அரசு கல்வித் துறையில் தன் ரீங்காரத்தைத் தொடர்கிறது. காரைக்கால் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக விளங்கும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்; பன்னூல்களைப் பதிப்பித்தவர். சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.
அரிதின் முயன்று பல செய்திகளைத் தொகுத்து ஜெர்மனி என்ற முத்தாரமாகத் தொகுத்துத் தொடுத்துத் தந்திருக்கிறார். நாட்டை அறிமுகம் செய்வது இவருக்குப் புது அனுபவம்; நமக்கும் தான்.
Be the first to rate this book.