உயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் வளர்க்கவேண்டிய அவசர அவசியம் இன்று உருவாகியிருக்கிறது.
2016-ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். ஒரு பைசா கூட செலவே இல்லாத ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கி, நமக்குச் சுவாசம் அளித்துவந்த ஒப்பற்ற உயிர்கள் அவை. 2 டிகிரி அளவுக்கு வெப்பநிலையையும் குறைத்து இயற்கை ஏசியாகவே திகழ்ந்தவை அவை. இச்சூழலில் ஆர்வம் பெருகினாலும்கூட, செடிகள் வளர்ப்பது குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று அறியாமல் இருப்பவர் பலர் உண்டு. அவர்களின் குழப்பங்கள் தீர்த்து தெளிவு பெறச் செய்யவே 'கார்டனிங்' எனும் இந்த நூல்.
விதைகள் நட்டு, தண்ணீர் ஊற்றினால் செடிகள் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மாற்றி, செடிகள் வளர்ப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல்வேறு தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவும் பத்திரிகையாளர் ஆர்.வைதேகியும் இணைந்து எழுதிய இந்த நூல் தோட்டக்கலை பற்றிய முழுமையான வழிகாட்டியாக அமையும். தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவின் ஆலோசனையில், நேரடி கண்காணிப்பில் பல தோட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் வெளிப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த அனுபவக் கருத்துகள் செழிப்புடன் செடிகள் வளர்க்க நிச்சயம் உதவும்!
Be the first to rate this book.