‘எல்லாவற்றுக்கும் மனசே காரணம்’ என்பார்கள். ஆனால், ‘நனவிலி மனமே காரணம்’ என்கிறது உளப்பகுப்பாய்வு. உள்ளத்தின் பெரும்பகுதியாக உள்ள நனவிலி மனம், மனிதனின் உள வாழ்வையும் சமூக வாழ்வையும் தீர்மானிக்கிறது. நனவுநிலைக்கு அடிப்படை நனவிலி மனம் என்பது உளப்பகுப்பாய்வு கண்ட பேருண்மை.
‘மனிதர் யாவரும் இரட்டை வாழ்க்கை உடையோர்’ எனக் கூறும் ஃப்ராய்ட், ‘நனவில் நாம் இயல்பானவர்களாகத் தோன்றினாலும் கனவில் பித்தர்களாகவே இருக்கிறோம்’ என்கிறார். இந்தக் கருத்தை லக்கான் வளர்த்தெடுத்து, ‘வாழ்க்கையே ஒரு கனவு’ என முடிவுரைக்கிறார். எனவே, அடிப்படையில் நமது உள இயல்பு பித்துத் தன்மையோடே உள்ளது. யூங்கின் பார்வையில், நனவிலி மனத்துள் பித்துத் தன்மையுடன் அறிவுசார் தர்க்கங்களும் உள்ளன.
புறத்து அம்சங்களைப் புரிந்துகொள்ள முடிகின்ற உள்ளத்தால், தன்னைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. காரணம், நனவிலி மனம். இது, புதிரான பகுதி. ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகியோர் இந்தப் புதிரை வெளிச்சமாக்குகின்றனர். அவர்கள் கோணத்திலான உளப்பகுப்பாய்வின் முப்பரிமாணங்களை இந்த நூலில் எளிய மொழியில் தி கு இரவிச்சந்திரன் அறிமுகப்படுத்துகிறார்.
இதை வாசிப்பதன் மூலம், நனவிலியின் மூன்று பாங்குகளைத் தெளிவாக அறியலாம்; நம்முள் இருக்கின்ற இருண்மைகளைக் களையலாம்; உளவியலையும் உலகியலையும் நுட்பமாகப் புரிந்து கொள்ளலாம். கலை, இலக்கிய மனநிலைகளை அறிந்தேற்கலாம்.
Be the first to rate this book.