பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது. அதற்கேற்ப, மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள்வதன் மூலம் காலனியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்சிகள் தொடங்கின. ஒருபுறம் மக்களையும் நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வது, மற்றொருபுறம் கலாச்சாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவது என்ற இரு வழிகளில் பல்வேறு முயற்சிகளை அரசு முன்னெடுத்தது. ஆனால் எதிலும் முழுமையடையாத இந்த அணுகுமுறை, இரட்டைக்கிளவியாய் அமைந்துவிட்டதால் ஃபிரான்சின் நோக்கம் நிறைவேறாமல் போனது.
அந்தக் காலகட்டத்தில், புதுச்சேரியிலிருந்து அடிமைகளாக அயலகம் ஏற்றுமதியான அடித்தட்டுமக்கள், தொடக்கக் காலங்களில் பட்ட துயரங்களையும், அதற்கு நேர்மாறாக ஃபிரஞ்சு இராணுவப் போர்வீரர்களாகச் சென்றோர் பெற்ற ஏற்றங்களையும் சொந்த மண்ணில் உள்ளூர்க் குடிமக்கள், தங்களின் வாழ்வுரிமைக்கும் வாக்குரிமைக்கும் நடத்திய போராட்டங்களையும், பெருந்தொற்றாய் வந்து தாக்கிய வைசூரியையும் பெருமழையாய், பஞ்சமாய்த் தாக்கிய பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியாமல் பாமர மக்கள் பட்ட துன்பங்களையும், வழிவழியாய் வந்த வழக்காறுகள் நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் மங்கியும் மடிந்தும் போனதையும், ஆண்டவர்கள் அகன்றாலும் இன்றும் காண்குறும் அவர்தம் வரலாற்று வடுக்களையும் பற்றிய பின்னணித் தகவல்களின் திரட்டே இந்நூல்.
Be the first to rate this book.