'தலைமுறைகள்' எழுதி ஏழு மாதங்களுக்குப் பிறகு 'பள்ளிகொண்டபுரம்' எழுதுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 25-4 -1967-லிருந்து 5- 5-1967 வரை இரண்டு வாரங்களில் எழுதப்பட்ட இந்த "ஃபைல்'கள்" புத்தக வடிவம் பெறும் என் மூன்றாவது நாவல். வெறும் யந்திரங்களாய், ஃபைல்களுடன் ஃபைல்களாய் இயங்கிக்கொண்டிருக்கையிலும் இதயமும் மூளையுமெல்லாம் மெளனமாய், ஆனால் தீட்சண்யமாய் எழுப்பும் நிசப்த் ஒலிகள்... மீட்சிக்காக ஆத்மா தீவிரமாய்க் செய்யும் சிலுவைச் சமர்கள்... பிறந்து வளர்ந்த கால கட்டத்தின் அரசியல், ச்மூக, பொருளாதார நாடித்துடிப்புகள்... இவற்றிற்குக் கலை வடிவம் கொடுக்க முடியுமா என்று நான் சுயம் வரித்துக் கொண்ட வதைப்புத்தான் இந்த ஃபைல்கள்... சரித்திர முக்கியத்துவம் மிக்க சம்பவச் சுழல்களில் காலகட்டத்தில் வாழந்துவிட்ட (குற்றத்?) தினால், அச்சுழல்களின் பின்னணியில் இன்றைய தேதியை காலரீதியில் வரைத்துப் பார்க்க இங்கே முயற்சிக்கப்பட்டிருக்கிறதே தவிர, எந்தத் தனிப்பட்ட நபரையோ, கட்சியையோ, அரசாங்க அமைப்பையோ புண்படுத்தும் உத்தேசம் இதை எழுதியவனுக்குக் கிஞ்சித்தும் இல்லை. நிகழ்ச்சிகளைவிட நிகழ்ச்சிகள் விளைவிக்கும் நினைவுச் சுவடுகளுக்குக் கலை முக்கியத்துவம் கொடுப்பவன் நான். எனவே நிகழ்காலத்தில் எட்டுமணி நேரமென்றோ ('ஃபைல்கள்'), நாற்பத்தியெட்டுமணி நேரமென்றோ ('பள்ளிகொண்டபுரம்') ஒரு சுய கட்டுப்பட்டை(இட, கால, ஒற்றுமை நாடகத்திற்கு மட்டுமல்ல, நாவலுக்கும் அவசியமானதுதான்) அமைத்துக்கொண்டு, சென்று காலத்து நிஜ நிகழ்ச்சிகளின் நிழல்களை விழச் செய்யப்படுகிறது. இந்த உத்தியினால் சம்பந்தப்பட்ட கருத்துகள் (Implications), அவை என்னதான் அதிர்ச்சி மதிப்பும் வெறும் உணர்ச்சி வெள்ள ஆழமும் கொண்ட உச்சகட்ட நிகழ்ச்சிகளாக இருந்தாலும், சமனப்பட்டு, அமர்ந்த குரலில் கைளாள முடிகிறது; ஆழமும் கனமும் எல்லாம் மிதமிஞ்சிப் போகாமல் பத்ப்படித்தமுடிகிறது. ஸஹிருதயர்களுக்கு இது ஒரு Commitment ஆக உறுத்தாது. கதாசிரியர் வேறு, கதாநாயகன் வேறு என்று தனித் தனியாக எதிரும் புதிருமாக நின்று கொண்டு, வர்ணித்து, விமர்சித்து, வியாக்கியானம் செய்து, நல் உபதேசம் செய்து கதை பண்ணும் பழமையை உதறிவிட்டு, ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் உயிரில் உணர்வில் ஊடாடி, எழுதியவனைக் கூடியமட்டும் நேரில் இனம் காட்டாமல் முகம் காட்டாமல் நாவலில் புகுந்துகொள்வது தேவையற்ற தெளிவின்மையோ இயைபின்மையோ (disharmony) ஆகாது; மாறாக இன்றைய நவீன நாவல் உலகின் நம்பத்தகுந்த இயல்பு. நடையைச் செப்பனிடும் போதையில் சொல்ல வேண்டியதைக் கோட்டைவிட்டுவிட எனக்கு இஷ்டமில்லை. எனவே உள்ளத்தில் எழுவதை, தெள்ளத் தெளிவாக, நேரடியாகத் தெளிந்து உரைக்கிறேன். ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதுவதாய் வாசகனை நினைத்து மயங்க வைத்துத் தங்கள் மேதாவிலாசத்தை விளம்பரம் செய்ய அப்பியாசம் செய்பவர்கள், இட்டுக்கட்டிய போலி பண்டித்தனமான குதாக்கங்களிலும் செயற்கை வர்ணனைகளிலும் ஈடுபட்டிருப்பவர்கள், இவர்கள் ஆர்ப்பாட்டமாய் இயங்கும் களத்தில், என் நடை பின் தங்கி போயிருப்பதாகவும், என் வாதமுகங்கள், வர்ணனைகள் யாவும் பாமரத்தனமாயிருப்பதாகவும் தோற்றமளித்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. 1968 - ல் ஆகஸ்டிலிருந்து டிசம்பர் வரை இந்நாவலைத் தொடராக வெளியிட்ட 'கணையாழி'க்கும், பாராட்டுகளைத் தெரிவித்த வாசகர்களுக்கும் என் நன்றி. --நீலபத்மநாபன்.
Be the first to rate this book.