‘ஃபீஹி மா ஃபீஹி’ என்பது மெளலானா ரூமியின் மிகப் பிரபலமான உரைநடை நூல். அவர் தன் சீடர்களிடம் பேசிய 71 உரைகளின் தொகுப்பு. சில உரைகள் பல பக்கங்கள் நீளும் அளவுக்குப் பெரியவை. சில உரைகள் ஒரே பத்தியில் முடிந்துவிடும் அளவுக்குச் சிறியவை. ஆனால், ஞானத்தால் எல்லா உரைகளும் விலைமதிப்பற்ற முத்துகள். ரூமி இந்த உரைகளை நிகழ்த்தியபோது அவருடைய மகன் சுல்தான் வலது, சீடர்கள் சிலரின் உதவியுடன் அவற்றை எழுதிவைத்தார் என்று சொல்லப்படுகிறது. ரூமியின் மாபெரும் ஞானக் காவியமான மஸ்னவீயைப் புரிந்துகொள்ள இந்த உரைகள் பேருதவி புரியும் என்று ஸூஃபி அறிஞர்கள் கருதுகின்றனர்.
‘ஸூஃபித்துவக் காதலின் நாவு’ என்று போற்றப்படுபவர் மெளலானா ரூமி. இறைக் காதலை அவர் பேசியிருப்பதுபோல் ஆழமாகவும் அகலமாகவும் வேறு ஒருவரும் வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை, வெறும் புகழ்ச்சி அல்ல. இறை ஞானத்தின் விழிப்பிலிருந்து இறைக் காதலைப் பேசியவர் அவர். அவரின் கவிதைகளில் காணப்படும் காதல் மயக்கம் உண்மையில் இறை ஞானத்தின் உச்சமான விழிப்பே என்பதை இந்த நூலை வாசிப்போர் அறியலாம்.
ஸூஃபித்துவக் கோட்பாடுகளை எளிய மக்களும் புரிந்துகொள்ளும்படி ரூமி தனது உரைகளை அமைத்திருக்கிறார். அதில் ஆங்காங்கே சிறிய கதைகளும் கவிதை மேற்கோள்களும் இடம்பெறுகின்றன. ஃபார்சீ மூலப் பிரதியும், உருது, ஆங்கிலப் பெயர்ப்புப் பிரதிகளும் கொண்டு இந்தத் தமிழாக்கம் வெளிவருகிறது.
‘ரூமியின் வாழ்வில் ஞானக் கதைகள் நூறு’, ‘ரூமியின் ருபாயியாத்’ ஆகிய ‘ரூமித்துவ’ நூல்களை மொழிபெயர்த்திருக்கும் ரமீஸ் பிலாலிதான் இந்நூலையும் தமிழாக்கியுள்ளார்.
------------------------
இந்த நூல், மெளலானா ரூமியின் ‘ஃபீஹி மா ஃபீஹி’ என்னும் நூலின் மூல ஃபார்சீ பிரதியையும், அப்துர் றஷீது தபஸ்ஸும் செய்த அதன் உருது மொழிபெயர்ப்பையும், W.M.தாக்ஸ்டன் ஜூனியர் செய்த அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் துணையாய்க் கொண்டு தமிழில் பெயர்க்கப்பட்டதாகும். A.J.ஆர்பெர்ரி செய்த ஆங்கிலப் பெயர்ப்பும் ஒப்புநோக்கப்பட்டது.
‘ஃபீஹி மா ஃபீஹி’ என்பதன் நேரடியான அர்த்தம் ‘அதில் என்ன உள்ளதோ, அதுவே அதில் உள்ளது’ என்பதாகும். இதை இன்னும் பல வழிகளில் அர்த்தப்படுத்தலாம். ‘அது என்னவோ அதுவேதான் அது’ என்று ஓர் அர்த்தம் தருகிறது மலேசிய ஆங்கிலப் பதிப்பு. ‘அதில் என்ன இருக்கிறதோ, அதுவே இதில் இருக்கிறது’ என்பது இன்னொரு சாத்தியமான அர்த்தம். அதாவது, ரூமியின் ஞானக் காவியமான மஸ்னவீயில் என்ன ஞானம் இருக்கிறதோ, அதுவே இந்த நூலிலும் இருக்கிறது. அதில் கவிதையாக இருக்கும் ஸூஃபி ஞானமே இதில் உரைநடையாக விளக்கப்பட்டுள்ளது.
------------------------
மெளலானா ரூமி சொல்கிறார்:
இந்த மொழிக்கு
அப்பால் எமக்கு
இன்னொரு மொழி
இருக்கிறது.
சொர்க்க நரகம்
இரண்டுக்கும் அப்பால்
எமக்கு
வேறோர் இடம்
இருக்கிறது.
விடுதலையுற்ற
இதயங்கள் கொண்டோர்
வேறோர் உயிரால்
வாழ்கிறார்.
அந்தத் தூய மாணிக்கம்
வேறொரு சுரங்கத்தில்
இருக்கிறது!
- ரூமியின் ருபாயியாத், #119
ரூமியின் ஞான உரைகளின் தொகுப்பாக அமைந்த ‘ஃபீஹி மா ஃபீஹி’ என்னும் இந்நூல் அந்தச் சுரங்கத்துக்கான வரைபடமாக அமைகிறது.
Be the first to rate this book.