‘ஃபேஸ்புக்’ - எகிப்து புரட்சிக்கு வித்திட்ட இணையதளப் பக்கம். இன்றைய நவீன காலத்தில் ஃபேஸ்புக் பற்றி அறியாத ஆட்களே இருக்க முடியாது. அறிவிற்சிறந்த பெருமக்களாக இருந்தாலும் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லை என்றால், உலகம் இளக்காரமாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. வி.ஐ.பி-க்கள் தங்களின் மனக் கருத்துகளை இறக்கிவைக்கும் தளமாக ஃபேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். கூகுள், ஜி-மெயில், ஆர்குட், பிளாக் எனப் படிப்படியான கணினி யுகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஃபேஸ்புக் குறிப்பிடத்தக்க அங்கத்தை வகிக்கிறது. அவசரகதியில் அதிரடியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வாழ்க்கை அதிகமான தேடல்கள் நிறைந்ததாக ஆகிவிட்டது. அதனால் உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், நண்பர்கள் என அனைவரோடும் பேசிப் பழகும் நேரமும், சந்தோஷமான தருணங்களும் காணாமல் போய்விட்டன. இந்தக் குறையைப் போக்கிடும் வகையில் அற்புத உருவாக்கமாக நியூயார்க்கின் அருகில் உள்ள சிறிய ஊரைச் சேர்ந்த இளைஞரான மார்க் ஜக்கர்பெர்க் நமக்கு வரப்பிரசாதமாக வழங்கியதுதான் இந்த ஃபேஸ்புக். சமூகத்தில் முகநூலின் தாக்கம் மிகப் பெரிய அளவில் வியாபித்துள்ளது. என்றோ பிரிந்த நண்பர்களையும், உறவுகளையும், பள்ளி-கல்லூரி சகாக்களையும்கூட தேடிக் கொடுக்கும் சந்திப்புப் புள்ளியாக இந்த சமூக வலைத்தளம் விளங்குகிறது. உங்கள் பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனே போதும்... ஃபேஸ்புக்கில் நீங்கள் உலகை வலம் வரலாம். ஃபேஸ்புக் எப்படி உருவானது, எந்த நோக்கத்தின் ஆரம்பப் புள்ளியாக அது அமைந்தது, அது படிப்படியாக வளர்ந்து இன்று உலக அளவில் பேசப்படும் தகவல் தளமாக எப்படி மாறியது என்பவற்றையெல்லாம் மிக எளிமையாக - அழகிய தமிழ் நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. மேலும், ஃபேஸ்புக்கில் எப்படி அக்கவுன்ட் துவங்குவது; நண்பர்களை எப்படி சேர்த்துக்கொள்வது; ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்களின் குழுவை எப்படி அமைப்பது; பொருளாதார ரீதியாக ஃபேஸ்புக் எப்படி பயன்படுத்தப்படுகிறது; சாட் செய்வது; நம் இல்லத்தின் விழாக்களை எப்படி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது; ஃபேஸ்புக்கில் பாதுகாப்பான வழிமுறைகளை எப்படி கையாள்வது; எப்படிப்பட்ட விஷயங்களில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பன போன்ற அற்புதமான, அடிப்படையான பல தகவல்களை இந்த நூலில் நமக்கு வழங்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். ஃபேஸ்புக்கின் ப்ளஸ் மைனஸ்கள் என்னென்ன என்பவற்றையும் ஆங்காங்கே நினைவூட்டி இருக்கிறார். ஃபேஸ்புக் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட இந்த நூலின் உதவியோடு உலக அளவில் நட்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்ளலாம்.
Be the first to rate this book.