'எப்படி எழுதுவது' என்று ஆர்வத்துடன் கேட்பவர்களுக்கும், 'நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்' என்று அறிந்துகொள்வதற்காகக் கேட்பவர்களுக்கும் இந்நூல் உதவக் கூடும்.
- பாரா
கலையைச் சொல்லித்தர முடியாது. ஆனால் நுட்பங்களை முடியும். இசை, ஓவியம் போன்றவை எப்படியோ, எழுத்தும் அப்படித்தான். அடிப்படைகளை, இலக்கணங்களை, வழி முறைகளை ஒரு சரியான ஆசிரியர் மூலமாக அறிந்துகொள்வது எளிது. இந்நூல் பா. ராகவனின் முப்பதாண்டுக் கால எழுத்துலக அனுபவச் சேகரிப்பின் சாரம்.
5 எழுதுதல் பற்றிய குறிப்புகள் எளிய மொழியில்
புத்தகத்தின் பெயர் : எழுதுதல் பற்றிய குறிப்புகள் வகை : எழுதுதல் பற்றிய கட்டுரைகள் ஆசிரியர் : பா. ராகவன் Pa Raghavan பதிப்பகம் : எழுத்து பிரசுரம் வருடம்/பதிப்பு : 2021 / முதற்பதிப்பு பக்கங்கள் : 201 விலை : 240/- பாராவின் இந்தப் புத்தகத்திற்கு முன் வெளிவந்த, எழுதுதல் பற்றிய புத்தகங்களுள் குறிப்பிடத்தகுந்தவை அமரர் ரா.கி.ரங்கராஜன் அவர்களின் “எப்படிக் கதை எழுதுவது?” (எகஎ), திரு.ஜெயமோகனின் “எழுதுக”, “எழுதும் கலை”, “நாவல் கோட்பாடு” மற்றும் “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” போன்ற புத்தகங்கள். இவற்றுள், பாராவின் இப்புத்தகத்தின் தனித்துவம், இதன் ‘எளிமை’. மிக இயல்பாக, ஒரு தேநீர்க்கடையில் அமர்ந்து, நாம் பாராவுடன் தேநீர் அருந்திக்கொண்டே, எழுதுதல் பற்றிய குறிப்புகளைக் கேட்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது இப்புத்தகம். மறுபுறம், ஜெயமோகனின் எழுதுதல் பற்றிய புத்தகங்கள் மிக முக்கியமானவை, செறிவானவை, பல தகவல்களைத் தாங்கியவை என்றாலும், அவை கனமான மொழியைக் கொண்டவை. அவை வாசகரின் ஒருமித்த கவனத்தைக் கோருபவை. எழுத வருபவர்கள் அந்தக் குறைந்தபட்சக் கவனக்குவிப்பைக்கூட நல்கவில்லை எனின் எப்படி? ஆனால், பாராவின் இப்புத்தகம் அந்தக் குறைந்தபட்சத்தைக்கூடக் கோரவில்லை. ரா.கி.ர-வின் எகஎ, மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தகம்தான். ஆனால், அது சிறுகதை என்ற ஒரு வடிவத்துடன் தன் எல்லையைக் குறுக்கிக்கொண்டு விட்டது. மாறாக, பாராவின் இப்புத்தகம், எழுத்து வடிவங்களைத் தாண்டி, பொதுவாக எழுதுதலைப் பற்றிப் பேசுவதில் கவனம் செலுத்துகிறது. எனவே, எழுதுதல் பற்றிய புத்தகங்களைப் படிக்க விரும்புவோர் இப்புத்தகத்திலிருந்து தொடங்குவது எளிதாக இருக்கும் என்பது என் கருத்து. “இன்றுவரை சறுக்கி விழாதிருக்க முடிகிறதென்றால், ஒரே காரணம் எழுத்து. நான் கேட்காமல் அது எனக்கு அளித்தவை நிறைய. அது கேட்டு நான் கொடுத்தது ஒன்றுதான். அது இது.” – என்று இப்புத்தகத்தைக் குறிப்பிடுகிறார் பாரா. இப்புத்தகம், ஒரு எழுத்தாளராக இருக்க, பாரா எத்தகைய பாதைகளைக் கடந்து வந்தார், யாருடைய கரங்களெல்லாம் அவரைத் தூக்கி விட்டன, எழுத்தாளர்கள் சந்திக்கும் பொதுவானச் சிக்கல்களை அவர் எப்படி எதிர்கொண்டார், அதற்காக அவர் பயன்படுத்திய உத்திகள் எவைஎவை, போன்ற பலவற்றைப் பேசுகிறது. அசோகமித்திரன், லா.ச.ரா., தி.க.சி., இளங்கோவன், ஜெயமோகன், ம.வே.சிவக்குமார், சா.கந்தசாமி, கல்கி கி.இராஜேந்திரன் போன்றோர் எவ்வாறு தனது எழுத்துகளைச் செம்மைப்படுத்த உதவினார்கள் என்பதை இப்புத்தகத்தின்வழியே கூறுகிறார் பாரா. அவருடனான எனது ஒரு சந்திப்பின்போது, அசோகமித்திரன், லா.ச.ரா., தி.க.சி., போன்ற ஜாம்பவான்கள், சிறுவன்தானே என்று எண்ணாமல், தன் எழுத்து மேம்பட, தனக்குச் செய்த உதவிகளைப் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசினார் பாரா. அவரின் நன்றியுணர்வை அவரது வார்த்தைகளிலும் முகபாவங்களிலும் உணர முடிந்தது. இறுதியாக அவர் சொன்னார், “அவங்க எனக்குப் பண்ணுனத நானும் இன்னொருத்தருக்குப் பண்ணனும் இல்லையா?” இதே கருத்தை, இப்புத்தகத்திலும் பதிவு செய்துள்ளார். அதனை, அவரது வரிகளிலேயே கேளுங்கள்: “முட்டி மோதித்தான் இதன் நுட்பங்களைப் பயின்றேன். சொல்லித் தரச் சொல்லிக் கேட்பவர்களுக்குத் தயங்காமல் நான் அறிந்ததைக் கற்பிக்கிறேன். எந்தக் கலையும் பகுதியளவு நுட்பங்களைச் சார்ந்ததே. ம.வே.சிவக்குமாரோ, அசோகமித்திரனோ, கந்தசாமியோ நான் போய்க் கேட்டபோதெல்லாம் முகம் திருப்பிக்கொண்டு போயிருந்தால், நிச்சயமாக இன்று நான் இல்லை.” நிற்க. தன்னுடைய இறவான், பூனைக்கதை, யதி, நிலமெல்லாம் ரத்தம், பதினான்காம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள் (இப்புத்தகம் முழுக்க, கழிவறையில் எழுதப்பட்டது. தினமும் கழிவறையில் அமர்ந்து கனநேரம் சிந்தித்து எழுதிய புத்தகம் J இதன் பின்னணி மிகவும் சுவையானது. ராகவனால் மட்டுமே இம்மாதிரி முயற்சிகளையெல்லாம் செய்ய முடியும் ;-)), கபடவேடதாரி போன்ற புத்தகங்கள் உருவாகிய விதத்தை நம்முடன் சுவைபடப் பகிர்ந்து கொள்கிறார் பாரா. இப்புத்தகத்தின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். * “பத்திரிகையில் ஒரு கதை பிரசுரமாக ஒரு சிறு புத்திசாலித்தனம் எழுத்தில் இருந்துவிட்டால் போதும். ஆனால், ஒரு நல்ல கதை எழுதுவதற்கு, இந்த மனித குலத்தின் மீது பெய்த முதல் மழையின் ஈரம் மனத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.” * “எளிய சொற்களில், சிறிய வரிகளில் ஒரு முழுமையைக் கொண்டு வருவதுதான் எழுத்தில் உள்ள பெரிய சவால்... இதை உணர முடிந்தால் மொழிசார்ந்த பதற்றங்கள் நீங்கிவிடும்.” * “மொழியைக் கவனமாகக் கையாள்வது எளிதன்று. இது துப்பாக்கி அல்லது கத்தியைக் கையாள்வதைப் போன்றதல்ல. வீட்டில் வைத்து, பாம்பு வளர்ப்பதை நிகர்த்தது.” * “நீயல்ல, அவைதான் உன்னைத் தேர்ந்தெடுக்கின்றன.” (படிப்பதற்காகப் புத்தகங்களைத் தெரிவு செய்தல் குறித்துக் கேட்ட பாராவிடம், ஒரு நூலகர் சொன்னது). * “இன்றைக்குக் குவி மையமே இன்றி எழுதிக் கொண்டிருக்கும் தலைமுறை இம்மாதிரி எழுத்துகளைத் (அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகள்)” தேடித் படிப்பது நல்லது. ஒன்று, நல்ல எழுத்து எதுவென்று புரிந்துவிடும். அல்லது, நாம் எழுதக்கூடாது என்பதாவது தெரிந்துவிடும்.” * “அலுவலகம், வீடு, உறவுகள், நட்புகள், கையிருப்பு, கடன்கள், கவலைகள் எல்லாம் இல்லாத மனிதர்கள் யாருமில்லை. இவை அனைத்தாலும் பாதிக்கப்படும் முதல் அப்பாவியாக எழுத்து இருந்துவிடக்கூடாது”. (பொதுவாக, எழுதாமலிருப்பதற்கு, எழுத முயலுவோர் பல காரணங்களைக் கூறுவார்கள். பாராவின் இவ்வரிகள் அவர்களை சாட்டையாலடிக்கக் கூடியவை.) * எழுத முனைவோர் ஏன் சிறந்தவை என்று சொல்லப்படுவனவற்றைப் படிக்க வேண்டும் என்பது குறித்து: “வாசகர்கள் விஷயம் வேறு. அவர்கள் தமது சொந்த விருப்பத்திற்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். ரசனைக்கு ஒவ்வாததை விலக்கி வைக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால், எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக விரும்புவோர் இப்படிச் செய்யக்கூடாது. எதையும் படிக்காமல் நிராகரிப்பது எழுத்தில் வாழ்வோருக்கும் வாழ விரும்புவோருக்கும் அடாது. ஆனால், படிக்க முடியவில்லை. சிரமமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? கஷ்டப்பட்டாவது படித்துவிட வேண்டும் என்பதுதான் ஒரே பதில்” (இத்தகைய புத்தகங்களை எப்படிப் படிக்கலாம் என்று ஒரு உத்தியைக் கூறுகிறார் பாரா. விருப்பமுள்ளோர் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.) * அசோகமித்திரனின் இரண்டு மகத்தான சூத்திரங்கள்: 1. மாத்தி எழுதிப் பாரேன்? 2. வேற எழுதிப் பாரேன்? * பாரா, தனது ஆரம்ப காலத்தில், இடஒதுக்கீட்டுக்கு எதிராக எழுதிய, ‘புவியிலோரிடம்’ என்ற நாவலை அவரது பெருமதிப்பிற்குரிய ஆளுமையான, தி.க.சி.-யிடம் திருத்தத்திற்குக் கொடுக்கிறார். தி.க.சி. ஒரு தீவிர இடதுசாரிச் சிந்தனையாளர். புத்தகத்தைப் படித்துவிட்டு தி.க.சி. கூறும் வார்த்தைகள் என்னை நெகிழ்த்தி விட்டன. சான்றோர் என்போர் பெரியோர் என்று நினைத்துக் கொண்டேன். பாராவின் வரிகளில் தி.க.சி-யின் வார்த்தைகளை இங்கே தருகிறேன். “எடுத்துக்கொண்ட கருப்பொருளைச் சரியாக எழுதியிருக்கிறாய். படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்போது விவாதம் செய்தால், புரிந்துகொள்ளக் கூடாது என்று மேல்மனம் உன்னைப் பிடித்து இழுக்கும். ஆனால், வயதும் அனுபவமும் கூடுகையில் இந்தக் கருத்து மாறும்.” அதுதான் நடந்தது என்கிறார் பாரா. * “உண்மையிலேயே (எழுத்து) நன்றாக இருக்குமானால், ஒரு பொட்டுச் சர்க்கரையைக் கண்டறிந்த எறும்புக் கூட்டத்தினைப் போல எந்த வழியிலாவது வாசகர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள்.” * “உண்மையான தர மதிப்பீடு, எழுதுபவன் காலத்துக்குப் பிறகு என்றாவது நிகழும். பிழைத்துக் கிடந்தால் அடுத்த ஜென்மத்தில் அதைத் தேடி அறிந்து கொள்ளலாம்.” (புதுமைப்பித்தனின் “கடிதம்” சிறுகதையை இவ்வரிகள் நினைவூட்டின.) * “இலக்கணத்தை நன்கு அறிந்த எழுத்தாளன் அநாயாசமாக அதனை மீற முடியும். அது துருத்திக்கொண்டு தெரியாது. இலக்கணத்தை அறிந்திருப்பதுதான் இங்கே முக்கியம். அதே போலத்தான் கலையிலும். ஒரு பிழையைத் தெரிந்தே செய்வதும் ஓர் அழகு. ஆனால், அது பிழைதான் என்பது தெரிந்திருக்க வேண்டும்”. நிற்க. எழுதுதல் பற்றிய பல முக்கியத் தகவல்களை இப்புத்தகத்தில் தருகிறார் பாரா. ஒரு ஆரம்பநிலை எழுத்துமுனைவோனின் நிலையில் நின்று அவனுடைய சிக்கல்களையும் அவற்றினின்று மீளும் வழிமுறைகளையும் பேசுகிறார். அவற்றை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்காது. அவற்றை நீங்கள் புத்தகத்தைப் படித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். எர்னெஸ்ட் ஹெமிங்க்வே, எழுதுதல் பற்றிக் கூறியுள்ள ஆலோசனைகளையும் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாரா. இது எழுத முனைவோர் மட்டுமே படிக்க வேண்டிய புத்தகம் என ஒதுக்கிவிடக் கூடாது. எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதற்கிணையானது ஒரு வாசகன் எழுத்தின் சூட்சுமங்களை அறிந்து கொள்வதும். அது அவனை வாசிப்பின் அடுத்த நிலையான, திறனாய்வு மற்றும் விமர்சனப் பாதைகளில் இட்டுச்செல்லும். அதைவிட முக்கியமாக, ஒரு வாசகன், எழுத்தாளனின் சமரசமற்ற உழைப்பையும் துயரங்களையும் சிலுவைப்பாடுகளையும் நிச்சயம் அறிய வேண்டும். அவற்றை ஒரு வாசகன் அறிய நேரும்போது, அவன் அடையும் குற்ற உணர்ச்சி, அவனைத் தீவிர வாசிப்பை நோக்கி உந்தித்தள்ளும். இந்தப் புரிதல் இல்லாததால்தான் தமிழில் வாசகவளம் கவலைக்கிடமாக உள்ளது. எழுத்தாளர்களுக்கு நம்மால் செய்ய முடிந்த குறைந்தபட்சக் கைம்மாறு, வாசிப்பதுதான். வாசிப்போம். வாசிப்பை நேசிப்போம். --- வ. இரமணன்
Ramanan 12-09-2024 10:02 am