ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்படிமங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி. ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாகக் கொண்டிருக்கிறான். அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அவன் சவால். மொழியில் ஒலியில் வடிவங்களில் வெளியில் இருந்து அவனுக்குக் கிடைக்கும் கடந்த காலப் படிமங்களை விலக்குவது, அன்றாடம் புழங்கும் எளிய கருத்துக்களைப் படிமங்களாக ஆக்குவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை அவன் செய்யவேண்டும். விளைவாகத் தனக்குரிய படிம மொழியை அடைந்து அதைத் தன் ஆழ்மனத்துடன் கச்சிதமாக ஒரே அலைவரிசையில் இணைக்க அவனால் முடியுமென்றால் அவன் கலையை உருவாக்க ஆரம்பிக்கிறான். கலையில் உள்ள தொழில்நுட்ப அம்சம் என்பது இது தான். அவ்வாறு இணைகையில் சமூகமனதின் குரலாக அவன் ஆகிறான்.
Be the first to rate this book.