கனவுகள் எல்லோருக்கும் பொதுவானவை. பெரும்பாலானோருக்கு எழுந்ததும் அவற்றின் நினைவுகள் கூட மறந்து போகும். சிலருக்கு நினைவுகள் மட்டுமேனும் மிச்சமிருக்கும். அரிதாக வெகு சிலரே அந்த கனவு உலகிலுள்ளே சிக்கிக் கொள்கின்றனர்.
அந்த மயக்கத்தில் இருந்து அவர்கள் வெளியில் வரமுடியாமலும் கனவுலகிலேயே வாழவும் முடியாமலும் அவதியுறுகின்றனர். ஆம், அவர்கள் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் தான்.
அந்த வெகுசிலரின் எண்ணிக்கை, இன்று உலக அளவில் கோடிகளில் உள்ளது.
நிழல் உலகில் இருந்து நிஜ உலகத்திற்குள் வந்துவிட பிரயத்தனப்படும் கோடிக்கணக்கானவர்களில் நாங்களும் அடங்குவோம்.
குழந்தைக்கு பிரச்சனை என்று அறிந்தபின்னர், தனது ஓடுக்குள் பத்திரமாக வாழப் பிரியப்படும் நத்தையைப் போல சிலரும், புழுவில் இருந்து பட்டாம்பூச்சியாக மாறுவதற்கு சிலரும் தங்களில் வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றனர். அல்லது மாற்றப்படுகின்றனர்.
கனிக்கு ஆட்டிசம் என்று அறிந்த பின்னரே, பலரைப்போல நாங்களும் இவ்வுலகினைப் பற்றி அறிந்துகொண்டோம். ஆட்டிச குழந்தைகள், அவர்தம் பெற்றோர், மருத்துவர்கள், தெரபிஸ்டுகள் என தொடர்ந்த எங்களின் பயணங்களில் வழியே நிறையக் கற்றுக்கொண்டோம்.
கண்டும் கற்றும் உணர்ந்ததை மற்றவர்களுக்கும் பகிரத்தொடங்கினோம்.
இன்றும் ஆட்டிசக் குழந்தைகளின் ஆரம்பநிலைப் பெற்றோரின் அச்சத்தை போக்குவதும் அவர்களுக்கு வழிகாட்டுவதுமான எங்கள் பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இத்தொடர் பயணத்தில் ஒரு பகுதியாக, தனது குழந்தை வளர்ப்பு அனுபவங்களைத் தொகுத்துத்தந்தார் லக்ஷ்மி.
ஒரு தாயாகவும், சிறப்பாசிரியராகவும் இருந்து, குழந்தைகளை செயல்கள் அவற்றின் பின்னால் இருக்கும் காரணங்கள் என தனது அனுபவங்களை ஆய்ந்து எழுதி இருக்கிறார். ஆரம்ப நிலை ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நிச்சயமாக உதவியாக இந்நூல் இருக்குமென்றே கருதுகிறேன்.
- யெஸ்.பாலபாரதி
1
18-03-2024 04:51 pm
5
Hariprasath 13-07-2019 02:47 pm
5
Magesh 05-05-2019 08:58 pm