இந்தக் கட்டுரைகளை இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிடமுடியும். முதலாவது பகுதி, தலித் வரலாற்றுப் பதிவுகளில்கூட இடம்பெறாத முக்கியமான அதே சமயம் மறக்கடிக்கப்பட்ட ஆளுமைகளைத் தேடிப்பிடித்து அறிமுகப்படுத்துகிறது. ரெட்டியூர் பாண்டியன், ஆனந்த தீர்த்தர் (இருவரும் அட்டையில் மேல், கீழாக இடம்பெற்றிருக்கிறர்கள்), அங்கம்பாக்கம் குப்புசாமி, வஞ்சிநகரம் கந்தன், டி.எம். மணி என்று வண்ணமயமான நாயகர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் நம்முன் விரிவடைகின்றன.
புத்தகத்தின் இரண்டாவது பகுதி, நன்கு அறியப்பட்ட ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் தலித் வரலாற்றியல் நோக்கில் அணுகி ஆராய்கிறது. கக்கன், சிவாஜி சிலைகள் பற்றிய ஒப்பீட்டுக் கட்டுரை ஓர் உதாரணம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஸ்பர்டாங்க் கூட்டம், காந்தியின் அரிஜன் சேவை தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம், தலித் இதழியல், திராவிடன் தமிழன் பறையன் போன்ற அடையாளங்கள், சாதி அரசியல், பண்பாட்டு அரசியல் என்று பல நிகழ்வுகளும் கோட்பாடுகளும் விவாதங்களும் நூல் முழுக்கப் பரவிக்கிடக்கின்றன. திராவிட இயக்கம், தலித் இயக்கம், இடதுசாரி இயக்கம் மூன்றின்மீதும் அக்கறை கொண்டிருப்பவர்கள் இந்நூலை அவசியம் வாசிக்கவேண்டும். ஸ்டாலின் ராஜாங்கத்தின் பார்வையையும் அவர் எழுப்பும் கேள்விகளையும் அவர்கள் ஏற்கலாம், விவாதிக்கலாம், மறுக்கவும் செய்யலாம். ஆனால் நிச்சயம் புறக்கணிக்கமுடியாது.
- மருதன்
Be the first to rate this book.