இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை. ரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த எதிர்ப்புக் குரல்களை எடுத்துக்கொண்டு, இந்தக் குரல்கள் இந்து சமயம் என்று இன்று பெயரிட்டு அழைக்கப்படும் சமயத்திலும் இந்தியச் சமூகத்திலும் ஏற்படுத்திய சலனங்களை ஆராய்கிறார். இந்தப் ‘பிறன்’களுக்கும் நிலைபெற்றுவிட்ட 'தானு'க்கும் உள்ள உறவாடலையும் இந்த உறவாடல் பரஸ்பரம் உருவாக்கிய மாற்றங்களையும் சீரமைப்புகளையும் அறியத்தருகிறார். காந்தியின் சத்தியாகிரகத்தின் வெற்றியின் பின்னால் இந்த எதிர்ப்பு மரபு நுட்பமாகப் பிரதிபலித்ததையும் காட்டுகிறார். ஒவ்வொரு நவீன சமூகத்திலும் பேச்சுரிமையின் ஒரு பகுதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமையும் குடிமகனுக்கு நிச்சயம் இருந்தாக வேண்டும். எதிர்ப்புக் கருத்துகளை விவாதத்திற்குட்படுத்த வேண்டும். எதிர்ப்பு என்றாலே வன்முறைப் புரட்சி என்று கொள்ளக் கூடாது; விடைகள் வேண்டி நிற்கும் தர்மசங்கடமான கேள்விகளைப் பண்பட்ட முறையில் விவாதிப்பதுதான் அதன் பொருள்.
Be the first to rate this book.