இத்தொகுதியில் அடங்கியிருக்கும் கட்டுரைகளின் நாயகர்கள் அனைவரும் வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு சூழல்களிலிருந்து உருவானவர்கள். வெவ்வேறு தளங்கள் சார்ந்து இயங்கியவர்கள். ஆயினும் காந்தியக்கொள்கைகளால் ஒன்றிணைந்தவர்கள். அனைவரிடத்திலும் அன்பு, சமத்துவம், கடைசி மனிதனையும் கணக்கிலெடுத்துக்கொண்டு நெய்யப்படும் அதிகாரம் என்னும் சாரத்தையே இலட்சியக்கனவாகக் கொண்டவர்கள்.
ஒவ்வொரு தளத்திலும் காந்திய ஆளுமைகள் எதிர்கொண்ட சவால்கள் வெவ்வேறு விதமானவை. அவற்றை அவர்கள் எதிர்கொண்டு வெற்றிகண்ட வழிமுறைகளும் வெவ்வேறு விதமானவை. ஆனால் அடிப்படையில் அனைத்தும் காந்தியப்பார்வை படிந்தவை. கருணையால் நிறைந்தவை.
இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஆளுமையின் வாழ்க்கையிலும் இப்பண்பு வெளிப்படுகிறது. அந்த ஒளிப்புள்ளிகளை பாவண்ணன் தன் மொழியாற்றலால் மேலும் சுடர்கொண்டவையாக முன்வைத்திருக்கிறார்.
ஒருபுறம் எல்லையற்ற நுகர்வுப்பண்பாட்டின் கவர்ச்சி. இன்னொருபுறம் வெறுப்பின் முழக்கம். பிறிதொருபுறம் தன்னைப்பற்றிமட்டுமே இருபத்துநாலு மணி நேரமும் எண்ணிக்கொண்டிருக்கத் தூண்டும் அறிவுச்சூழல். மற்றொருபுறம் தெளிவுகிட்டாமல் நெஞ்சில் குவிந்திருக்கும் ஐயங்கள். இன்றைய காலகட்டத்தில் இப்படி நான்குபுறங்களிலும் அச்சமூட்டும் சூழல்களுக்கு நடுவில் வாழும் நமக்கு காந்திய ஆளுமைகளின் அறிமுகத்தை வழங்கும் பாவண்ணனின் எழுத்து வற்றாத மன எழுச்சியையும் ஆறுதலையும் வழங்குகின்றன.
Be the first to rate this book.