உலக அளவில் ஆட்டோமொபைல் என்பது மிகப் பெரிய துறை. இந்தத் துறை, நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு துறை வளரவேண்டுமானால், அந்தத் துறையில் அறிவுசார் பங்களிப்பிலும் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையின் வளர்ச்சி முழுமையடையும்.
முன்பு, கார் என்றாலே ஒரு சில மாடல்களே இருந்தன. சுலபமாக நமக்குத் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிடவும் முடியும். ஆனால், இன்றைக்கு கார் வாங்கலாம் என்று நினைத்தால், எந்த காரை வாங்குவது என்ற குழப்பம் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுவது இயல்பு. வாடிக்கையாளர்கள் அந்தக் குழப்பம் இல்லாமல் தனக்கு ஏற்ற வாகனத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் விதத்தில், கடந்த 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது `மோட்டார் விகடன்' மாத இதழ். புதுப்புதுப் பெயர்களில் அறிமுகமாகும் நவீனத் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் தொடங்கி, எதிர்காலத் தொழில்நுட்பங்கள் வரை இன்றைக்கு தமிழ் வாசகர்கள், வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வதில் முன்னோடியாக விளங்கும் மோட்டார் விகடனில் வெளிவந்த தொடர்தான் `எந்திரன்'. காரில் என்னவெல்லாம் இருக்கின்றன; அது எப்படி வேலை செய்கிறது. ஒவ்வொரு பாகத்தின் செயல்பாடுகள் என்ன; எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விவரங்களை, நமக்கு எளிதாகப் புரியும் விதத்தில், உதாரணங்களோடு மிக அழகாக விளக்கியிருக்கிறார் இந்த நூலாசிரியர்.
ஆட்டோமொபைலின் அடிப்படையே, மெக்கானிக்கல் ஆற்றலில் செயல்படுவதுதான். ஆனால், மெக்கானிக்கலுடன் மிக எளிதாக இணைந்து கொண்டது எலெக்ட்ரானிக்ஸ். அதேசமயம், அடிப்படை என்பது எப்போதும் மாறாதது. அந்த அடிப்படை மெக்கானிஸித்தையும் எலெக்ட்ரானிக்ஸ் செயல்பாடுகளையும் தனது அனுபவத்தின் மூலம் இங்கே பதிவு செய்திருக்கிறார் பரணிராஜன். இந்தப் புத்தகம் ஆட்டோமொபைல் துறை சார்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் இருக்கும் எல்லோருக்கும் மிகப் பயனுள்ள நூலாகவும் இருக்கும்.
Be the first to rate this book.