சிந்திய ரத்தத்துக்கு தீர்வுகள் கிடைக்காமலே இங்கே மீண்டும் மீண்டும் இரத்தம் சிந்தப்படுகின்றது. இழப்பதற்கு ஏதுமில்லை என்றிருக்கும் போதே இந்த மண்ணில் மீண்டும் போர் வெடித்துவிடுகின்றது. போரை உருவாக்குபவர்கள் யார்? ஏன் உருவாக்குகிறார்கள்? ஈற்றில் போரின் துயரத்தை சுமப்பவர்கள் யார்? போர் வியாபாரிகள் தோற்றிருக்கிறார்களா? போன்ற பல கேள்விகளுக்கு இன்று எல்லோருக்கும் விடைகள் தெரியவாரம்பித்துவிட்டன. மனித மற்றைமைகள் இப்பிரதிக்குள் இரண்டாம் மூன்றாம் பிரஜைகளாகவே ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் தனிமைப்படுத்தலின் அரசியலையும் பொதுமைப்படுத்தலின் வன்மத்தையும் இங்கே காணலாம். இதனால் சோகம் கவிந்திருந்தாலும் சிரிப்பின் வெடிப்பொலிகளையும் கேட்க முடிகின்றது.
பல்லின சமூகங்களில் இருந்து அல்லது பல்பண்பாடுகளில் இருந்து ஒருமிக்கும் சிந்தனைகளும் அதற்கான நிகழ்த்துகைகளுமே போருக்குப் பிந்திய இன்றைய சூழலில் நமக்குத் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களில் சமூகங்களுக்கும், சமூகங்களுக்கும் பண்பாடுகளுக்கும் பண்பாடுகளுக்கும் சிவில் நிறுவனங்களுக்கும் சிவில் நிறுவனங்களுக்கும் இடையில் உரையாடல் நிகழவில்லை. முரண்பாடுகள் கூர்மையடைவதை தணிப்பதற்கும் மோதுகைகளை தவிர்ப்பதற்கும் உரையாடல் இன்றியமையாதது. மனித நேயம், கருணை, ஜீவகாருண்யம் போன்ற அறங்கள் முகிழ்க்கும் இக்கதைகள் அவ்வுரையாடலுக்கு உதவக்கூடுமென்ற அவாவினாலேயே இவை தொகுப்பாகின்றன.
சகர்ஜாத் மரணத்தின் வாயிலிருந்து தன்னையும் தன்னைப் போன்ற பெண்களையும் காப்பாற்றுவதற்காக சொன்னவை தான் ஆயிரத்தோர் இரவுக் கதைகளாகும். கதையாடல் மூலம் மன்னித்தலை மனித மனங்களில் விதைக்க முடியும் என்ற நம்பிக்கையினாலேயே அவள் ஒவ்வொரு இரவும் அம் மன்னனுக்கு கதை சொல்கிறாள். தனிமனிதர்களுக்கிடையில் மன்னிப்பு என்று தொடங்கி சமூகங்களுக்கு மத்தியில் விரிவுபடக்கூடிய சாத்தியங்களும் உள்ளன. மன்னித்தல் என்பது மற்றவர்களை மட்டுமல்ல தன்னையும் சேர்த்துத்தான் என்று சொல்கிறார்கள் இக்கதையாடிகள். கதைகளை மீளவும் மீளவும் சொல்லும் போது அது மனுட நேயத்ததை நோக்கியே நகர்கின்றது கதைகள் மாயப்புனைவுலகில் சஞ்சரிக்க வைக்கின்றன. கதைகள் நம்மை நாமே மீட்டெடுக்க உதவுகின்றன. கதைகள் நம்மை ஆறுதல்ப்படுத்துகின்றன மொத்தத்தில் கதைகள் எமது காயங்களை ஆற்றுகின்றன.
- ஏ.பி.எம்.இத்ரீஸ்
Be the first to rate this book.