எங்கே அந்த சொர்க்கம் என்ற தலைப்பில் வே. குமரவேல் ஒரு நூலை எழுதி உள்ளார். அது அறிவார்ந்த வாதங்களைக் கொண்ட, சுவையான கடிதங்களின் தொகுப்பாக உள்ளது. அந்த விவாதம் திராவிடமா? தமிழா? எது சரி என்பதில் தொடங்குகிறது. அதன் பிறகு தமிழ்தேசியமா? திராவிட தேசியமா? எது சாத்தியம் என்று தொடர்கிறது. இதற்கு இடையில் உலகமயம், தாராளமயம் ஏற்படுத்தி இருக்கிற தீமைகள் வரை செல்கிறது.
உலகமயம்,தாராளமயம் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிற தீமைகளைப் பற்றிப் பேசும் புத்தகம் திராவிட இயக்கத்தினர் காங்கிரசைத் தவிர்த்து, பொதுவுடமை இயக்கத்தோடு ஏன் தொடர்ச்சியான உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கேட்கிறது. காங்கிரஸ் இயக்கத்தின் மீது வைக்கப்பட்ட குடும்ப அரசியல் குற்றச்சாட்டு தற்போது திராவிட இயக்கத்தின் மீதும் குறிப்பாக திமுகவின் மீது வைக்கப்படுவதைக் குத்திக்காட்டுகிறது நூல்.
முதிர்ந்த திராவிட இயக்கக் கொள்கை வீரர்கள் இன்று சலிப்போடு இருப்பதையும் கடந்த ஐம்பதாண்டு கால தமிழக திராவிட இயக்கம் பற்றிய ஒரு விமர்சனபூர்வமான ஆய்வாகவும் இப்புத்தகம் இருக்கிறது. திராவிட இயக்கம் மலர்ந்த போது தமிழ்ச் சமூகத்தில் இருந்த ஒரு அறிவுத்தேடல் காலகட்டம் சொர்க்கமாக நூலாசிரியருக்கு இருக்கிறது. அது தற்போது மழுங்கி நரகம் போல மாறிவிட்டதையும் அரசியலில் அறநெறிகள் தாழ்ந்து விட்டதையும் அவர் ஒரு உரத்த சிந்தனை வடிவிலே விவாதிக்கிறார்.
Be the first to rate this book.