இராமானுஜனைப் பற்றி ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழில் மிகக் குறைவான அளவிலேயே வந்துள்ளது. அந்தக் குறையை இரா. சிவராமன் போக்கிவிட்டார்.
இராமானுஜனின் ஜனன ஜாதகத்தில் இருந்து தொடங்கும் இந்தப் புத்தகம் அவர் கண்டுபிடித்த கணக்குச் சூத்திரத்தின் கையெழுத்துப் பிரதியுடன் முடிகிறது. தன்னுள் ஏதோ ஒரு கடவுள் சக்தி இருந்து இயக்குவதாக இராமானுஜன் நினைத்தார். அவருக்குள் ஏதோ மாய சக்தி இருப்பதாக பலரும் கருதினார்கள். தென் இந்தியாவின் கேட்பிரிட்ஜ் என்று சொல்லப்பட்ட கும்பகோணத்தில் படித்து தன்னுடைய சொந்த முயற்சி, ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய மேதைமையை வளர்த்துக்கொண்டவர் இராமானுஜன்.
மற்ற மாணவர்கள் விளையாடிக் கழித்தபோது, அதனைப் பொருட்படுத்தாமல் கணிதத்தில் கழித்தார். தான் இறைவன் அருள் பெற்று பெரிய மேதையாகும் அறிவையும் திறனையும் பெற்றிருந்தாலும் அந்த ஆற்றலை உணர்வதற்கு கடின உழைப்பும் தியாகமும் கொண்டிருக்க வேண்டும் என்ற பெரும் உண்மையை இராமானுஜன் மற்றவர்களுக்கு உணத்தினார் என்று எழுதுகிறார் சிவராமன். 12 வயதில் ஏற்பட்ட கணித ஆர்வம் அவரது மரணப் படுக்கை வரை இருந்ததை அங்குலம் அங்குலமாக வர்ணிக்கிறது இந்தப் புத்தகம்.
இன்று உலகம் புகழும் மேதை, அன்று எத்தகைய புழுக்கத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதைப் படிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. மேதைகளின் வாழ்க்கையும் கணக்கைப்போலவே புரிந்துகொள்ளச் சிக்கலானதாக இருக்கிறது. இவை இன்றைய தலைமுறை படிக்க வேண்டிய பாடங்களாகவும் இருக்கின்றன.
- புத்தகன்
Be the first to rate this book.