நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு மிகவும் அருகிலிருக்கும் ஓர் அரசாங்கம். அது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று அலகுகளால் ஆனது. தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியையும், அங்கு வாழும் மக்களின் ஆளுகையையும், நிர்வாக அமைப்பையும் அவை கொண்டிருக்கின்றன.
‘எங்கள் நகரம் எங்கள் ஆட்சி’ என்னும் இந்த நூலில் க. பழனித்துரை தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கத்தை நம்மிடம் அறிமுகம் செய்கிறார்.
74ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் நகரங்களில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் முன்னெடுப்பு.
இருந்தும் புதிய நகர உள்ளாட்சிகளின் ஆற்றலும் வீச்சும் என்ன என்பது பெரும்பாலான மக்களுக்கு இன்றுவரை புரியவில்லை என்பதைக் கவனப்படுத்துகிறார் நூலாசிரியர்.
இந்த நூல் மக்களின் பங்கேற்புடன் உள்ளாட்சியில் நடைபெறும் மேம்பாட்டுச் செயல்பாடுகளையும், அவற்றின் விளைவாக உருவாகும் அடிப்படை மாற்றங்களையும் மையமாகக் கொண்டிருக்கிறது. மக்களை அதிகாரப்படுத்தி, நகர மேம்பாட்டுப் பணிகளிலும் ஆளுகையிலும், அவர்கள் எப்படிப் பங்கெடுக்க வேண்டும் என்பதையும் மிகவும் எளிய நடையில் விளக்குகிறது.
பெருமளவில் தொழிலாளர்களை ஈர்த்தல், தொழில்சார்ந்து செயல்படுதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் நகரங்களின் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றது. இந்த நிலையில் ‘பங்கேற்பு மக்களாட்சி’அதனை மாற்றி எப்படித் தூய்மையான, பொலிவு மிக்க நகரங்களை உருவாக்க உதவும் என்பதை நூலாசிரியர் செயலூக்கத்துடன் விளக்குவது புதிய அனுபவமாய் இருக்கிறது.
இந்த நூலிலுள்ள பத்துக் கட்டுரைகளும் நகரத்தில் வசிக்கும் பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் கட்டாயம் படிக்க வேண்டியவை..
Be the first to rate this book.