அரசியலில் தீவிரமாக இயங்கிவரும் 25 தமிழகத் தலைவர்களையும் வெங்கய்ய நாயுடு, எடியூரப்பா ஆகிய பக்கத்து மாநிலத்துத் தலைவர் களையும் துக்ளக் இதழுக்காகப் பேட்டி கண்டு, அதை நூலாகவும் தொகுத்திருக்கிறார் பத்திரிகையாளர் ரமேஷ். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலிலதாவை மையமாகக் கொண்டிருந்த தமிழக அரசியலில், அவர்களோடு சேர்ந்தும் பிரிந்தும் மீண்டும் சேர்ந்தும் இயங்கிய சில அரசியல் தலைவர்களின் அனுபவங்கள் வழியாக மூவரது இயல்பையும் அணுகுமுறையையும் புரிந்துகொள்ள முடிகிறது. திராவிடக் கட்சிகளோடு இணங்கியும் பிணங்கியும் அரசியல் நடத்திவரும் பொதுவுடைமை இயக்கம், காங்கிரஸ் இயக்கம், பாஜக மற்றும் தலித் இயக்கத்தின் தலைவர்களும் தங்களது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
1989-ல் முதல்வர் கருணாநிதி இலவச மின்சாரத்தை அறிவித்தார் என்று நினைவுகூர்கிறார், அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் துரைமுருகன். ஆனால், குமரி அனந்தனோ, அத்திட்டம் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்றும் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சுதந்திர தின விழாவில் அறிவிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சியில், இரண்டரை ஏக்கர் நிலம் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. கருணாநிதி அந்த வரம்பை நீக்கி, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார் என்கிறார். இப்படி தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் சில விஷயங்களை இந்தப் புத்தகம் இன்னும் தெளிவாக்கு கிறது. எனினும், இருள் சூழ்ந்திருக்கும் சில பகுதிகளை அப்படியே கடந்து விடவும் முயற்சிக்கிறது.
1996 தேர்தலில் காங்கிரஸ் தனியாகத் தேர்தலைச் சந்தித்தால், ஆதரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது ரஜினி பிரதமரால் மிரட்டப்பட்டார் என்கிறார் ப.சிதம்பரம். பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்த ரஜினி, அதுபற்றி தன்னிடம் கூறியதற்கு மாறாக ப.சிதம்பரத்தின் கருத்து இருக்கிறது. எனவே, அதைப் பிரசுரிக்க மாட்டேன் என்று சோ.ராமசாமி மறுத்துவிட, ப.சிதம்பரமும் பேட்டியைத் தொடர்வதற்கு மறுத்து விட்டார். உண்மை என்னவென்பதைச் சந்தித்தவர்தான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனாலும், திரை நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை நமது அரசியல் தலைவர்கள் ரஜினிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
Be the first to rate this book.