பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ‘மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனின் ‘ஆசை’யைத் தூண்டி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியவர்கள், சமூகத்தின் சமநிலை கருதி ஆசையை கட்டுக்குள் வைக்கக் கற்றுக்கொடுத்தவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்திவிடலாம்.
அப்படி முதல் தரப்பினரில் ஒருவர் ‘உலகமயம்’ என்னும் மந்திரக்கோலை நீட்டி ஒவ்வொருமுறை ‘வளர்ச்சி’ என்ற சொல்லை வெவ்வேறு காலகட்டங்களில் உச்சரித்தபோதும் புதிய வஸ்துகள் தோன்றின. ஆனால் இரண்டாம் தரப்பினர்கள் கணித்ததைப்போல் அவற்றின் மறுசுழற்சிக்கு வடிகால் இல்லாததால் இதுவரை அழிவிற்குப் பயன்படாத அறிவியல் கண்டுபிடிப்பு என்று எதுவுமே மிஞ்சவில்லை என்பதுதான் சாபக்கேடு.
‘ஆசைகளையும் துறக்காமல், அழிவையும் விதைக்காமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல விளைவுகளை மட்டுமே தரக்கூடிய மாற்றங்கள் சாத்தியமா?’ என்று தேடத்துவங்கியவர் ஜிப்2, பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பணி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, கிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தார். அவர் பெயர்தான் எலான் மஸ்க்!
எலான் மஸ்க்கின் வாழ்வின் வழியாக, அவரது சாதனைகள் ஊடாக, அவரது இலக்குகளை எட்டும் பயணத்தின் பலனாக நாம் என்ன பெறப்போகிறோம் என்றால் அவரது முயற்சிகள் எல்லாம் வெற்றிபெற்று ஒன்றோடொன்று தொடர்புகளை ஏற்படுத்தி இணையும் புள்ளியில் உலகமே ‘எலான்மயம்’ ஆகியிருக்கும். அதில் நாம் என்ன செய்துகொண்டிருப்போம்? என்ற பருந்துப்பார்வை தரிசனம்தான் இந்தப் புத்தகம்!
Be the first to rate this book.