நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் ஒட்டுமொத்த இணையால் விளைந்தவையே உணவுப் பொருள். உயிராகவும் உணவாகவும் மருந்தாகவும் ஊட்டமாகவும் கருதப்படுகிறது. நாகரிக மாற்றங்களின்படி மனித முன்னேற்றத்துடன் வளர்ந்து, மாறி, பெருகி, கலந்து, உருக்கொண்டு, பிறந்து வருவதும் உணவுதான். உயிர்காக்கும் ஓர் உன்னத படைப்பில் மனித மாசுகளால் நச்சுக்கலந்த உணவும் ஒருபுறம் விஸ்வரூபம் எடுத்து வருவதும் உண்மை.
இயற்கை முழுவதும் கெட்டு செயற்கையின் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தக் காலத்தில், ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் தட்டில் இருக்கும் உணவு இயற்கையா, செயற்கையா - கொல்லுமா, காக்குமா எனப் பல கேள்விகளோடு உண்டு முடிக்கிறோம். கம்பங்கூழ், இடியாப்பம், தோசை, பழைய சோறு, மீன், சாம்பார், புட்டு என இந்த நூலில் பட்டியலிடப்பட்டிருக்கும் உணவு வகைகளில் அச்சமின்றி உண்ணும் உணவு எது? அளவோடு உண்ணும் உணவு எது, தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை, நோயுற்றோர் அறவே அகற்ற வேண்டிய உணவு எது? அனைத்துத் தரப்பினரும் உட்கொள்ளும் உணவு எது என்று விளக்கமாகக் கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பாகும்.
இது வரை நாம் உண்டு மகிழ்ந்த உணவை ஒதுக்க முடியாது. அதற்கு மாற்று உணவு என்ன... நல்ல உணவு எது... விரும்பிய உணவை எந்த அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்... எந்த உணவை எந்த நேரத்தில் மட்டும் உண்ணலாம் என்பதை விளக்கியிருக்கும் நூலாசிரியர், உணவு வகைகள் தொடர்பான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உணவு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகளையும் இந்த நூலில் தந்திருக்கிறார். எது கெடாத உணவோ, அது கெட்ட உணவு. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஒருவித வாசனையுடன் கெட்டுப்போன தன்மையை வெளிப்படுத்தும் உணவுகளே நல்ல உணவுகள் என பல்வேறு தரப்பு ஆய்வின் முடிகள் கூறுகின்றன. தற்காலத்துக்கு ஏற்ப ஓர் உணவு புரட்சி ஏற்படுத்தி விழிப்புஉணர்வு தரும் நூல் இது.
Be the first to rate this book.