பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் களையவும், பின்னர் அவர்கள் மத்தியில் அரசியல் தலைமையை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகளை, ஏனைய வரலாற்றுச் சம்பவங்களுடன், இந்த நூலில் தமது அனுபவங்களாகப் பகிர்ந்துள்ளார், நாவலர் ஏ.இளஞ்செழியன். இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர்கள், இந்திய வம்சாவளி மக்களிடையே நிலவிய போராட்ட வாழ்க்கையையும், இலங்கை அரசு கையாண்ட அடக்குமுறைகளையும், அவ்வப்போது இலங்கைக்குச் சென்ற தமிழகப் பேச்சாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் மக்களிடையே ஆற்றிய உரைகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். மேலும், இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை வகித்து, ஈழத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நாவலர் ஏ.இளஞ்செழியன், ஈழத் தமிழ்மக்களிடையே எத்தகைய அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் என்பதனையும் அறிய இந்த நூல் வாய்ப்பளிக்கிறது. உலகெங்கும் பரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மக்கள், இலங்கை மலையக மக்களின் வரலாற்றை அறியும் வகையில் இந்த நூலை, விகடன் பிரசுரம் தமிழ்ச் சமூகத்துக்கான பெரும் கடமையாக வெளியிடுகிறது...
Be the first to rate this book.