கடந்த இருபது ஆண்டுகளாகப் புனைவுலகில் செயல்படும் குமார் அம்பாயிரத்தின் ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அதற்கு முன் கவிதைகள் எழுதிப் பண்பட்ட கை. புதுவிதக் கதைகளைப் புதிய கூறல்முறைகளில், பெரிதும் நாட்டார் சொல்முறையில், எழுதியிருக்கிறார். தொகுப்பின் கதைகளைப் படித்து முடித்ததும் மாய உலகம் ஒன்றில் சஞ்சரித்த உணர்வு எஞ்சுகிறது. இயற்கையின், விலங்குகளின், தொன்மங்களின், ஆவிகளின், காமத்தின், சமூகப் பொது நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டவர்களின் கதையுலகம் இது. கட்டியமைக்கப்பட்ட பண்பாட்டுக்கு எதிராகத் தொல்மனிதனின் இயல்புணர்ச்சிகள் இங்கே களிகொள்கின்றன. இலக்கியப் பிரதிகள் அதிகமும் காட்டாத பிரதேசங்களில் கதைகள் நிகழ்கின்றன. இக்கதைகளை உள்ளார்ந்த உண்மையுடன் சொல்ல தனித்த வாழ்க்கைப் பார்வையும் நயமான மொழியும் குமாருக்கு வாய்த்திருக்கின்றன. சமகால தமிழ்ச் சிறுகதைக்குக் காத்திரமான பங்கை வழங்குகிறது இத்தொகுப்பு.
- எழுத்தாளர் ஆர். சிவக்குமார்
Be the first to rate this book.