1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கும் முன்பே ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர் எல்லிஸ் என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நூல் இது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, திருவள்ளுவர் படம் பொறித்த நாணயங்களை வெளியிட்ட அரசு அதிகாரி என்ற அளவிலேயே பரவலாக அறியப்படும் எல்லிஸின் பரந்த மொழியியல் ஆய்வுச் சாதனைகளை இந்நூல் ஆழமாக ஆராய்கிறது. பிரிட்டிஷ் காலனிய ஆவணங்களில் புதைந்துகிடக்கும் செய்திகளைத் திரட்டியுள்ளதோடு, ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளாக எவருமே பார்த்திராத எல்லிஸின் கையெழுத்துப்படிகளையும் கண்டெடுத்து இந்நூலை எழுதியிருக்கிறார் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன். கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நூலின் தமிழ் வடிவம் இது. 2007இல் வெளிவந்து நல்வரவேற்பைப் பெற்ற நூலின் திருத்தி, விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு இது.
Be the first to rate this book.