திராவிட இயக்க முன்னோடிகளில் என்.வி.என். என்று அழைக்கப்படும் என். விஜயரங்கம் நடராஜனால் 1949ஆம் ஆண்டு தொடங்கி நடத்தப்பட்ட வார இதழ் ‘திராவிடன்’. இந்த இதழில் ‘திராவிடப் பித்தன்’ என்பவர் ஆரம்பக் கல்விச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இராஜாஜி 1953ஆம் ஆண்டு தன் அமைச்சரவையைக்கூடக் கலந்து ஆலோசிக்காமல் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இச்சூழலில் ‘திராவிடன்’ இதழில் பார்ப்பனரல்லாதார் பார்வையில் தமிழகக் கல்வி வரலாற்றை விரிவாக எழுதினார் திராவிடப் பித்தன். சமண, பெளத்த சமயங்களின் கல்விப் பணிகள், தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கல்வியியல் சிந்தனைகள், கிறித்துவச் சமயப் பணியாளர்களின் கல்விப் பணிகள், காலனிய அரசின் கல்விப் பணிகள் ஆகியவற்றை வரலாற்று நோக்கில் புள்ளி விவரங்களுடன் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார். திராவிடப் பித்தன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து விரிவான ஆய்வு முன்னுரை எழுதிப் பதிப்பித்துள்ள இரா. பாவேந்தன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
Be the first to rate this book.