திமுகவின் முன்னணித் தலைவராகவும் திராவிட இயக்கச் சிந்தனையாளராகவும் விளங்கிய முரசொலி மாறனின் முக்கியப் பதிவு இது. திராவிட இயக்கத்தின் தொடக்க காலத்தைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் திராவிட இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் 1912 ஆம் ஆண்டு தொடங்கி 1920 – 1921ல் நீதிக்கட்சி சென்னை மாகாண ஆட்சியைப் பிடித்தது வரையிலான வரலாற்றை ஏராளமான சான்றாதாரங்களுடன் பதிவுசெய்திருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தோற்றம் என்பது பிராமணர் – பிராமணர் அல்லாதார் பிரச்னையில் தொடங்குகிறது. ஆகவே, அந்தப் பிரச்னையின் ஆணிவேரில் இருந்து முரசொலி மாறன் தனது புத்தகத்தைத் தொடங்குகிறார். ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, சூத்திரர்களின் நிலைமை, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பிராமணர்கள் நடத்திய உத்தியோக ஆக்கிரமிப்பு, அன்னி பெசண்ட்டின் அரசியல், திராவிடர் சங்கத்தின் தொடக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்கிற நீதிக்கட்சி உருவானதன் பின்னணி, காங்கிரஸ் மற்றும் சுயராஜ்ஜியக் கட்சிகள் சென்னை மாகாணத்தில் செலுத்திய ஆதிக்கம், நீதிக்கட்சி தேர்தலை எதிர்கொண்ட விதம், ஆட்சியைப் பிடித்த முறை ஆகியவற்றை விரிவாக தகுந்த ஆதாரங்களுடன் பதிவுசெய்திருக்கிறார் முரசொலி மாறன்.
திராவிட இயக்கத்தின் தொடக்க காலத் தலைவர்களான டாக்டர் நடேச முதலியார், தரவாத் மாதவன் நாயர், பிட்டி தியாகராய செட்டியார், பனகல் அரசர் ராமராய நிங்கார், சுப்பராயலு ரெட்டியார், கே. வேங்கட்ட ரெட்டி நாயுடு, பி.டி. ராஜன், ஏ. ராமசாமி முதலியார் ஆகியோரின் பங்களிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சற்றேறக்குறைய ஒன்பது ஆண்டுகால வரலாற்றை மட்டுமே பேசும் நூல் என்றாலும் திராவிட இயக்கத்தின் தொடக்கப் பின்னணி குறித்த புரிதலுக்கு இது அவசியம்.
Be the first to rate this book.