இன்றைய சவாலான அவசர உலகில், உங்கள் மனத்தை அமைதிப்படுத்தி, உங்கள் கவனத்தை உங்கள்மீது குவிப்பது எப்படி என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டா? உங்கள் வழியில் உள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் ஒரு விஷயம் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் பல சமயங்களில் யோசித்ததுண்டா?
‘தியானம்’ என்ற இந்நூலில், உலகப் புகழ் பெற்ற ஆன்மிக ஆசானான ஸ்ரீ எம், தியானம் குறித்தும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதன் பலன்கள் குறித்தும் உங்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கிறார். தியானம் என்பது உலகம் நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றுகின்ற ஒரு பண்டைய வழக்கமாகும். ஸ்ரீ எம் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தும் பல்வேறு பண்டைய உரைகளிலிருந்தும் தான் கைவசப்படுத்தியுள்ள அறிவைக் கொண்டு, வயது வித்தியாசமின்றி எவரொருவரும் தங்களுடைய அன்றாட வாழ்வில் தியானத்தை எளிதாகக் கடைபிடிக்கக்கூடிய விதத்தில் அதன் பல சிக்கலான அம்சங்களை எளிமையான மற்றும் சுலபமான வழிமுறைகளாகக் கூறுபோட்டுக் கொடுத்திருக்கிறார்.
கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்த ஸ்ரீ எம் ஓர் ஆன்மிக வழிகாட்டி, சமூகச் சீர்திருத்தவாதி, மற்றும் கல்வியாளர் ஆவார். அவர் ‘சத்சங்’ அமைப்பின் தலைவராக உள்ளார். 2011ல் அவர் தன்னுடைய வாழ்க்கை நினைவுக் குறிப்புகளை இமய குருவின் இதய சீடன்: ஒரு யோகியின் சுயசரிதை (Apprenticed to a Himalayan Master: A Yogi’s Autobiography) என்ற நூலின் வடிவில் எழுதினார். அது உடனடியாகப் பெருமளவில் விற்பனையாகியது. அந்நூலின் தொடர்ச்சியாக, ‘The Journey Continues’ என்ற மற்றொரு நூலை அவர் எழுதினார். அது 2017ல் வெளிவந்தது. 2018ல் வெளியிடப்பட்ட அவருடைய நாவலான ‘Shunya’தேசிய அளவில் விற்பனையில் சாதனை படைத்தது.
Be the first to rate this book.