நாடகம், திரைப்படம், ஓவியம் என்று பல துறைகளில் இயங்கியவர் என்றாலும் ஞாநியின் முதன்மை அடையாளம் இதழியலாளர் என்பதுதான். தமிழின் முன்னணி இதழ்கள் பெரும்பாலானவற்றில் அவர் பணியாற்றியும் இருக்கிறார், பங்காற்றியும் இருக்கிறார். அவரது நாற்பதாண்டு கால இதழியல் பயணத்தில் அவரின் கனவாக ஒலித்துக்கொண்டிருந்த தாளலயம் ‘தீம்தரிகிட’. 1982-லிருந்து 2006 வரை வெளிவந்த ‘தீம்தரிகிட’ இதழ்களின் தொகுப்பை ஏறக்குறைய 2000 பக்கங்களில் ஏழு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது ஞானபாநு பதிப்பகம்.
இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை ஆட்சிக்காலத்தில், கருத்துச் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இயங்கிய ஆங்கிலப் பத்திரிகைகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழிலும் அப்படியொரு செய்தி விமர்சனப் பத்திரிகையைக் கொண்டுவர வேண்டும் என்ற கனவு, ஞாநியின் 28-வது வயதில் முகிழ்த்திருக்கிறது. அது பாரதியின் நூற்றாண்டு. பாரதியின் ‘மழை’ கவிதையில் இடம்பெற்றிருந்த ‘தீம்தரிகிட’ என்ற தாளக்குறிப்பே அந்தப் பெருங்கனவின் தலைப்பாக மாறியது. ரௌத்ரம் பொங்கும் பாரதி, அதன் அடையாளச் சின்னமாகவும் ஆனார்.
Be the first to rate this book.