“ஒரு சீனக்கதை. சீனப்பெருவீரர் ஒருவர் தன் வாளை சாத்தியமான எல்லை வரை கூர்மைப்ப்படுத்த விரும்பினார். அந்தக் கூர்மைக்கு முன்னால் உலகின் எந்தச்சக்தியும் எதிர்த்து நிற்கக்கூடாதென எதிர்பார்த்தார். தன் உடலையும் மனதையும் கையையும் கூர்மைப்படுத்திக்கொண்டார். கடைசியில் அம்மூன்றும் அவரது வாளில் வந்து அமைந்தன. ஆகவே வாளைத் தீட்ட ஆரம்பித்தார் தீட்டும்தோறும் வாள் தேய்ந்ததே அல்லாமல் உச்சகட்ட கூர்மை நோக்கிச் செல்லவில்லை. ஒவ்வொரு முறை கூரிய நுனியில் விரலால் வருடும்போதும் அவருக்குள் ஒரு குரல் சொன்னது. இந்தக்கூர்மை போதாது என. ஆகவே அவர் மலையுச்சி நோக்கிச் சென்றார். அங்கே தனிமையில் வாழ்ந்த பெருங்கவிஞர் துஃபு வைக் கண்டு கேட்டார். இந்த வாளை இன்னமும் கூர்மையாக்க நான் என்ன செய்யவேண்டும். ’அந்த நுனிக்கு உன் சொந்தக்குருதியில் ஒரு துளியை உண்ணக்கொடு’ என்றார் துஃபு. ஆகவே அவர் கீழிறங்கிவந்து தன் சொந்த ரத்தத்தை ஒருதுளி சேர்த்துத் தீட்ட ஆரம்பித்தார். வாள் தட்டாரப்பூச்சியின் சிறகு போலவும் தெறிக்கும் நீர்த்துளி போலவும் கூர்மை கொண்டது. தேவதேவனின் இக்கவிதைகள் இதயத்தின் குருதி சேர்த்துத் தீட்டப்பட்டவை. ஆகவே நம் காலகட்டத்தின் வேறெந்தச் சொற்களையும் விடக்கூர்மையானவை. ஒரு சாதாரண வாசகனாக அல்ல, தமிழின் இந்தக்காலகட்டத்தின் முதன்மையான எழுத்தாளனாக , இந்தக்காலகட்டத்தின் இலக்கியமதிப்பீடுகளைத் தீர்மானிப்பவர்களில் ஒருவனாக நின்று ஒன்று சொல்கிறேன். இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் இறந்து மறக்கப்படுவீர்கள். உங்கள் குழந்தைகள் மறக்கப்படும். இந்நகரின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு கல் இன்னொரு கல் மீது அமராதபடிக்கு இல்லாமலாகும். அதன்பின்னரும் தேவதேவனின் கவிதைகள் வாழும்.”
Be the first to rate this book.