என்னைப் பற்றி நீங்கள் ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும், அதிகம் அறிந்திருக்க முடியாது. இதோ நான் யாரென்று உங்களுக்குச் சொல்கிறேன்.
என்னை ஒரு பெரிய அவநம்பிக்கையாளன் – அதாவது மக்கள் நம்பும் பலவற்றின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குபவன் - என்று சொல்லுபவருண்டு. நான் ஒரு நாஸ்திகன், மக்கள் உண்டென்றும் புனிதமென்றும் மதிக்கும் பலவற்றை இல்லையென்று சொல்லுபவன் என்றும் சொல்லுவர். குறிப்பாக பிராமணர்களுக்கு என் மீது ஒரு தனி வெறுப்புண்டு. பெளத்தர்களும், சமணர்களும் வேதத்தின் புனிதத் தன்மையை மறுதலிக்கும் நாஸ்திகர்களானாலும் அவர்கள் பரலோகம் எனப்படும் மறுமையை மறுத்தவர்களில்லை. ஆனால், சார்வாகன் இரண்டையும் மறுதலிக்கிறான்! பிராமணர்கள் சொற்படி சார்வாகன் நாஸ்திக சிரோன்மணி, நம்பிக்கையின்மையின் மணிமகுடம். அவர்கள் வாதத்தின்படி நான் ஒரு கொச்சைப் பொருள்முதல்வாதி. புலனுணர்வின் வழியாக பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் நாம் எதையும் ஊகித்தறிய முடியாது, நல்லொழுக்கம் என்று எதுவுமில்லை, துய்த்திருப்பதே மானுட வாழ்வின் பயன் என்றெல்லாம் பரப்புரை செய்பவன் என்றெல்லாம் என்னைப் பற்றிச் சொன்னார்கள் பிராமணர்கள்.
இவர்களைத்தவிர, வரலாற்றையும், மொழியியலையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயும் நவீன கல்விமான்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சார்வாகன் என்று எவருமில்லை, அந்தப் பெயர் குறிப்பது ஒரு பழம்பெரும் பொருள்முதல்வாத சித்தாந்தத்தை மட்டுமே என்று வாதிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை சார்வாக சித்தாந்தத்தை நிறுவியவர் பிரகஸ்பதி என்ற யாரோ ஒருவர். ஆனால் இந்த பிரகஸ்பதி யாரென்பது மர்மமாகவே உள்ளது. பிரகஸ்பதி என்ற பெயருடன் இசை அறிஞர் ஒருவர் இருந்தார், அர்த்தசாஸ்திரம் எழுதிய பிரகஸ்பதி ஒருவர், தர்மசாஸ்திரங்களைத் தொகுத்த பிரகஸ்பதி ஒருவர். இதில் எந்த பிரகஸ்பதி சார்வாக சித்தாந்தத்தை நிறுவினார்? பிரகஸ்பதி முனிவருடன், எனக்கிருக்கும் சிக்கலான உறவைப் பற்றி இந்தப் பண்டிதர்களுக்குத் துளிகூடத் தெரியாது. இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் சார்வாக சித்தாந்தத்தைப் பின்பற்றிய தத்துவாசிரியர்கள் எழுதிய நூல்கள் எதுவும் நம்மிடம் இல்லையென்பதே என்பார்கள். சார்வாகர்களைப் பற்றி ஏனையோர் எழுதிய நூல்களிலுள்ள தகவல்களின் அடிப்படையில்தான் இந்த வல்லுநர்கள் இத்தகைய முடிவுக்கு வருகிறார்கள். இவற்றில் பலவும் பெரும் வன்மத்துடன் எழுதப்பட்டவை. தூசு படிந்து, மக்கிய வாசனையுடன் இருக்கும் நூல்களை ஆராய்வதற்கு, பழைய நூலகங்களுக்கும், ஆவணக் காப்பகங்களுக்கும் ஆராய்ச்சியாளர்களைப் படைபடையாக அனுப்பும், ஆனால் நல்லெண்ணத்துடன் செயல்படும், இந்த நவீனகால அறிஞர்களைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது. அவர்களை அவர்களின் விரயமான தேடல்களில் விட்டுவிடுவோம்; கடுமையாக உழைத்திருப்பதால் அவர்களுக்கு ஊகங்களில் திளைக்க உரிமையுள்ளது.
Be the first to rate this book.