விவேகத்தை இழந்ததால் கிடைக்கும் வேகத்தை மட்டுமே வாடிக்கையாக கொண்டது இன்றைய வாழ்க்கை முறை. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கை முறையில் ஆத்மார்த்தமான அமைதியைத் தேடி அலைபவர் அநேகர்.மனிதன் எனும் உருவிலேயே அமைதி எனும் அருவம் அடங்கி இருப்பதை உணராது, புண்ணியத்தைத் தேடி எங்கெங்கோ அலைகிறது இன்றைய நவநாகரிக உலகம்.
உண்மையின் பிடிப்பில் எப்போதும் இருப்பவர்களுக்கு துன்பமே கிடையாது. தவறான பாதையில் செல்பவர்களுக்கு இன்பமே கிடையாது.சுயத்தை நம்புபவன் வீழ்ந்தாலும் நேர்செய்து கொள்கிறான். விஞ்ஞானத்தின் அடிப்படையில் மெய்ஞானத்தை உணர்ந்த ஒவ்வொருவரும், தூய அன்பின் மூலம் ஆண்டவனை உணர முடியும் என்பதை அறிவர்.நாம் யார், பிறப்புக்கு முன்னும் பின்னும் உள்ள நிலை என்ன,உயிர்களுக்கும் உலகுக்குமான தொடர்பு எப்படி உருவானது, நம்முள் உள்ள தெய்வத்தை உணரும் வழி, மனிதம் என்ற தொடக்க நிலையின் பின்னணி, மனித சமுதாயத்தில் ஆன்மிகம் கலந்த பின்னணி என, அறிவியல்ரீதியிலான கேள்விகளுக்கான பதில்களை, மனித வாழ்க்கை நடைமுறையின் ஆய்வில் கிடைத்த கருத்துச் சிதறல்களை விஞ்ஞானத்தின் அடிப்படையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன்.
உலக உயிர்களின் பரிணாம வளர்ச்சியை, படிப்படியான முன்னேற்றத்தை முதன்முதலில், உயிர், மனம், வரலாறு, தெய்வம் என அத்தியாயங்களாக பிரித்து விளக்கி இருப்பது, இந்த நூலின் சிறப்பு. வைரமாகவே இருந்தாலும் பட்டைத் தீட்ட ஒருவர் வேண்டும் என்பதுபோல,உடல் அமைப்பில் நீங்கள் மனிதனாக இருந்தாலும், உணர்வின் அடிப்படையில் புனிதனாக உங்களைப் பட்டைத் தீட்டிக்கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.
Be the first to rate this book.