இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களில் மகாத்மா காந்தி முன்னின்று நடத்திய தண்டி யாத்திரைக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு. எதிர்ப்புகள் எத்தனை வந்தாலும், அச்சுறுத்தல்கள் அடுக்கடுக்காக அணிவகுத்தாலும், எதற்கும் அசராமல் அகிம்சை வழியில் அறப் போராட்டம் நடத்தி, யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றிய மாவீரர் மகாத்மா காந்தி. சத்தியாகிரகத்தின் உண்மையான வெற்றி என்பது, எதிராளியையும் நம்முடைய பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ளச் செய்து, அவர்களை நமக்கு ஆதரவாகச் செயலாற்ற வைப்பதுதான் என்பதையும் புரிய வைத்தவர் அண்ணல் காந்தியடிகள். படிப்பறிவில்லாத, அன்றாட வாழ்வுக்கே திண்டாடிக் கொண்டிருந்த ஏழை எளிய மக்களை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை அவர். யாத்திரையில் பங்குகொண்ட ஒவ்வொருவருமே அவர்களாகவே முன்வந்து கலந்துகொண்டவர்கள்தான். உப்பு அள்ளும் போராட்டத்தின் எல்லையாக காந்தி, தண்டியை ஏன் தேர்ந்தெடுத்தார்..? தொண்டர்கள் எப்படியெல்லாம் ஆங்கிலேயரிடம் சிக்கி ரத்தம் சிந்தினார்கள்..? போராட்டத்தின் கடைசிநாள் வரையிலும் அகிம்சையை கடைப்பிடித்ததின் ரகசியம் என்ன..? _ இப்படி பல உண்மை நிகழ்வுகளை ஒரு டைரிக் குறிப்பு மாதிரியாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் பா.முருகானந்தம். சுதந்திரப் போராட்டம் மீது ஆர்வம் கொண்ட வர்களுக்கும், வரலாற்றுச் சுவடுகளை விரல் நுனியில் வைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் உப்பு சத்தியாகிரகம் பற்றிய தகவல்களை அள்ளித்தரும் அரிய நூல் இது.
Be the first to rate this book.