தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமாகவே இருக்கும்.
மிகுந்த துயரம் கொண்ட காயப்பட்ட ஒரு ஆத்மாவை இக்கதைகளில் என்னால் அடையாளம் காணமுடிந்தது. இதை எழுதிய மனுஷியை அறிந்தவன் என்பதால், என்னால் அந்தத் துயரத்தை புரிந்து கொள்ள முடிகிறது. பங்கு கொள்ளவும் முடிகிறது. என்றாலும், இதயத்திலிருந்து வழியும் குருதியை ஒற்றை விரலால் துடைத்துவிட முடியாது. ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு நிலைமை சீர்பெறும் வரைக்கும், தமயந்தியும் என்னை உள்ளிட்ட வாசகர்கள் யாவரும் ரத்த சாட்சிகளாக மட்டுமே இருக்க முடியும்.
வாசகர்கள் ஒரு முக்கியமான எழுத்துக் கலைஞரோடு கைகுலுக்கப் போகிறார்கள். மிகவும் அருமையான தருணங்களை அவர்கள் சந்திக்கப் போகிறார்கள்.
- பிரபஞ்சன்
Be the first to rate this book.