உண்மையின் , அறத்தின் குரலாக வெளிப்படும் இலக்கியம் எப்போதுமே தனக்கான அழகியலைத் தானே உற்பத்தி செய்து கொள்கிறது. ஒவ்வொரு மலரும் அதற்கான நறுமண நியாயத்தை வைத்திருப்பது போலவே , இந்திய சமூகத்தின் மனசாட்சியில் புதிய எதிரொலிகளை எழுப்பும் தலித் கவிதைகளும் அவற்றிற்கே உரித்தான கவிதையியலை வைத்திருக்கின்றன. தலித் கவிதைகளை ஒட்டு மொத்தமாகத் திரட்டி ஆய்வு செய்கிறபோது சம்பிராதாயமான கவிதையியலை அவை வெளிப்படையாக மறுதலித்து , சமூக மாற்றத்தை உருவாக்கக் கூடிய புதிய அழகியல் ஒன்றை மறுநிர்மாணம் செய்கின்றன என்பது தெரிய வரும். அநீதியான சமூக-பொருளதார-அரசியல் நிலைமைகள் இத்தகைய வித்தியாசமான புதிய இலக்கிய வகைகளை –உற்பத்தி செய்து கொள்கிறபோது புனித இலக்கிய பீடங்களில் இருந்து கொண்டு குரல் எழுப்புவோர்களின் புலம்பல்களை அது உதாசீனம் செய்கிறது. பெண்ணியம், சூழலியம், தமிழ் தேசியம் ஆகியவற்றின் இழைகள் தமிழ் தலித் கவிதைகளின் ஊடே பயணிப்பதை டாக்டர் அகவி தனது ஆராய்ச்சியில் கண்டெடுத்து இந்நூலில் சிறப்பான முறையில் வெளிப்படுத்துகிறார். மார்க்சியத்தில் நம்பிக்கையுள்ளவர் என்ற முறையிலும் தானே ஒரு கவிஞர் என்ற முறையிலும் இவரது இந்நூல் தலித் கவிதைகள் குறித்த ஓர் ஆவணம்போல் செயல்படுகிறது.
Be the first to rate this book.