சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாகியிருந்த மாற்றுப் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களில் ஒன்று அடையாள அரசியல். இனி அரசியல் என்பது பண்பாட்டின் அடிப்படையில்தான் அமையும் என சாமுவேல் ஹட்டிங்டன் போன்றோர் முழங்கும் நிலை ஏற்பட்டது. சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகளின் களமாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் அது தலித் அரசியலாக வடிவு பெற்றது.
தமிழக வரலாற்றில் சாதியத்திற்கு எதிரான குரல்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. நவீன உலகில் அதற்கான கோட்பாட்டு வடிவத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தம் செயற்பாடுகளின் ஊடாகவும், எழுத்துக்களின் ஊடாகவும் நமக்குத் தந்துள்ளார். இந்தப் பின்னணியில் தமிழகத்தில் உருவான தலித் எழுச்சியுடன் இணைந்து நின்று கோட்பாட்டு உருவாக்கம், களச் செயல்பாடு எனக் கடந்த கால் நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வரும் அ. மார்க்சின் 51 கட்டுரைகள், இரு முன்னுரைகளுடன் உருவாகியுள்ளது இந்த நூல். இதே கால கட்டத்தில் அ. மார்க்ஸ் தலித் மக்களின் மீதான வன்முறைகளின் போது உண்மை அறியும் குழுக்கள் அமைத்து பல அறிக்கைகள் வெளியிட்டிருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் கடந்த ஒரு நூற்றாண்டுகால தமிழக தலித் அரசியலின் ஏற்ற இறக்கங்கள், கோட்பாட்டு விவாதங்கள் ஆகியவற்றுக்கான ஒரு முக்கிய ஆவணமாக அமைகிறது.
Be the first to rate this book.