அனடோல் பிரான்ஸ் பிரெஞ்சு மொழியில் எழுதிய நாவலை தமிழில் எஸ். சங்கரன் மொழிபெயர்த்திருக்கிறார். 1921ம் ஆண்டில் அவருக்கு இந்நாவலுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. மதம் மனிதனை எந்தளவு முட்டாளாக்கிவிடுகிறது என்பதை கிண்டலாகவும் அதே நேரம் அதனை விவாதத்துக்கு உட்படுத்தியும் பேசுகிறது நாவல்.
எகிப்தில் கிருஸ்துவம் பரவ ஆரம்பித்த நாட்களில் நடந்த மாற்றங்களும், மக்களின் மனதில் அப்போது இருந்த கடவுள் பற்றிய அபிப்ராயங்களும் அபிப்ராய பேதங்களும் தர்க்க ரீதியாக விவாதிக்கப்படுகிறது. அப்போது இருந்த கிருஸ்துவ மதத்தை அதன் நம்பிக்கைகளை கிண்டலாக சொன்னாலும் அதற்கு பின் இருந்த அரசியலையும் , மக்களின் அறியாமையும் வலுவாக சொல்கிறது நாவல்.
தாயிஸ் என்பவள் ஒரு விலை மாது. அவளைத் திருத்தி நல்வழிப்படுத்தச் சென்றார் ஒரு பாதிரியார். பாதிரியாரின் உபதேசங்களைக் கேட்டு விலைமாது புனிதவதியானாள். ஆனால், பாதிரியாரின் மனம் பண்படவில்லை. விலைமாதின் பேரழகில் மயங்கி, அவளுக்கு அடிமையானார். பாதிரியார் என்ற புனிதத் தன்மையை இழந்து, உலகின் வெறுப்புக்கு ஆளானார். இது தான் இந்த நாவலின் மையப் பொருள்.
இந்த நாவல் வாசித்து முடிக்கும்போது கடவுள், மதம் இரண்டும் அந்த காலத்திலிருந்து இப்போது வரை தொடர்ந்து மனிதர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும், அதற்கு எதிரான தர்க்கங்களும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாத மனிதனின் உணர்வுகளும், பயங்களும், அவனின் மூடநம்பிக்கைகளும் உண்மையான தேடல் உள்ள மனிதர்களின் வாழ்க்கை என்று பல தரப்பட்ட தரவுகளில் செல்கிறது. வாசித்து முடிக்கும்போது மரணம், வாழ்க்கை, கடவுள் குறித்தான எண்ணங்களில் மாற்றம் நிச்சயம்.
Be the first to rate this book.