கியூபா அமெரிக்காவுக்குத் தெற்கில் உள்ள ஒரு குட்டித் தீவு. இந்தியாவுக்கு வழி தேடிய கொலம்பஸ் முதலில் கால்வைத்த தீவு. காலனி ஆதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக உரக்க விடுதலைக் குரல் கொடுக்கும் நாடு. இதனால் உலகம் நன்கறிந்த நாடு.
அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், மனிதர்களின் நெடுநாள் வாழ்வு, குழந்தைகள் நோய்களுக்குப் பலியாகாமல் வளர்வது போன்ற சாதனைகளால் சமூக வளர்ச்சியில் அமெரிக்காவையும் மிஞ்சி நிற்கும் நாடு.
.
இந்த நாட்டை நாம் சமூக அரசியல் வரலாற்றுக் கண்ணுடன் பார்ப்பதற்கு, தான் நேரில் பார்த்த அனுபவத்தின் மூலமும் ஆராய்ச்சியின் மூலமும் நம்மை அழைத்துச் செல்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை.
கியூபாவின் வரலாற்றை அதன் தொடக்க காலம், அடிமைகளின் வரவு, காலனிய விடுதலைப் போர்கள், அமெரிக்கக் கைப்பாவை பதீட்சாவின் கொடுங்கோலாட்சி, அமெரிக்காவின் கொடூரச் செயல்கள் என்று வரிசையாக எளிய தமிழில் ஆதாரத்துடன் விவரிப்பது நமது பார்வையைக் கூர்மையாக்குகிறது. கியூபாவின் புரட்சி, புரட்சியின் நாயகனான ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆளுமை, அவர் அரசியலிலும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் செய்த அடிப்படை மாற்றங்கள், அவருடைய பொதுவுடைமை ஆட்சியின் இலட்சியம், சோவியத் யூனியனுடன் சிக்கலான உறவு, மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைப் போர்களில் உதவி, தொடரும் கியூபாவின் பிரச்சினைகள் என ஒவ்வொரு கண்ணியாக ஆசிரியர் தொடுத்துக் கட்டி நமது கியூபா பற்றிய தேடலுக்கான அறிவைச் சிரமமில்லாமல் தருகிறார்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமைக்குப் பின்புலனாக இருக்கும் அவருடைய ஆளுமையின் புதிரையும் அவிழ்க்கிறார் ஆசிரியர்.
கொடுங்கோன்மையின் வீழ்ச்சி, சமத்துவப் புரட்சி, ஏகாதிபத்தியங்களின் இயலாமை, வளம் குறைந்த பொருளாதாரத்தில் சமூக வளர்ச்சிச் சாதனை ஆகியவை பற்றி அக்கறை உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது.
தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.
'அமெரிக்காவில் முதல் வேலை', 'அமெரிக்க அனுபவங்கள்', 'அமெரிக்காவின் மறுபக்கம்' என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, 'ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்', 'பாலஸ்தீன இஸ்ரேல் போர்', 'போப் பிரான்சிஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.
Be the first to rate this book.