திரையரங்கில் திரைப்படம் முடிந்து சுபம் போட்ட பிறகும் திரையில் எறும்பென ஒடிக்கொண்டிருக்கும் பெயர்களை ஒருவர் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பாரானால் அவர் திரைப்படத்துறையில் வேலை செய்பவராகவே இருப்பார். அந்த ஒருவருக்குத் தெரியும் திரைப்படமெனும் ராட்சச தேர் இவர்களால் தான் நகர்த்தப்படுகிறதென்று. அந்த அருமையை உணர்ந்ததாலேயே அயல் சினிமா தொடங்கப்பட்டபோது சினிமாவின் எல்லாத் துறைக்கும் முக்கியத்துவம் தர வேண்டுமென விரும்பினோம்.
ஒவ்வொரு இதழிலும் சினிமாவின் அனைத்துத் துறை வல்லுனர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றிருந்தன. ஒப்பனைக் கலைஞர்கள், உடைவடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பாளர், போஸ்டர் வடிவமைப்பு செய்பவர், ‘அக்ஷன் கொரியோகிராபர்’ எனப்படும் ஸ்டன்ட் மாஸ்டர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் உள்ள விற்பன்னர்களின்’ பேட்டிகள் எளிமையாய் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.
இவை எதிர்பார்த்த மாதிரியே பாராட்டுகளையும் பெற்றிருந்தன. இவர்கள் தங்கள் துறை சார்ந்த பணி அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை, தங்களுடைய மனநிலையை எப்படி உருவாக்கிக் கொள்கிறார்கள் என்றும் பேசியிருக்கிறார்கள்.
நான் மிகவும் ரசித்து தொகுத்தத் தொடர் இது.
இந்தத் தொடரில் அயல் சினிமா பெருமைப்பட்டுக் கொள்வது மொழிபெயர்த்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பதே,, அதிலும் திரைத்துறைக்குத் தொடர்பில்லாதவர்கள். அவர்களின் ஆர்வம் மிக முக்கியமானது.
மொத்தம் பதினெட்டு நேர்காணல்கள், வெவ்வேறு துறைகள்...நிச்சயம் அயல் சினிமாவின் மனநிறைவு தரும் பயணம் என்று தான் இந்தத் தொகுப்பைச் சொல்ல வேண்டும்.
Be the first to rate this book.