எளிதில் கைவரப் பெறுவதில்லை. சமுதாய நடப்புகள், அவலங்கள், தேவைகள் முதலியன குறித்து நூறு பக்கங்களில் மிகச் சிறப்பாக எழுதுகின்ற எழுத்தாளர்கள்கூட, அதே விஷயத்தை அதன் ஆழமும் வீச்சும் குறையாமல் ஒரு பக்கத்திற்குள் எழுதவேண்டும் என்றால் மிகவும் தயங்குவார்கள்; எப்படி விஷயத்தை ஒரு பக்கத்திற்குள் அடக்குவது என்று திகைப்பார்கள்.
ஆனால் சின்னச் சின்ன மின்னல்கள் எனும் நூலில் இடம்பெற்றுள்ள இந்தக் கட்டுரைகள் எல்லாமே இதே தலைப்பில் சமரசம் இதழில் ஒரு பக்கக் கட்டுரைகளாய் வெளிவந்தவைதாம். வெளிவந்த காலத்தில் அவற்றின் கருத்தழகு, மொழியழகு, நடையழகு ஆகியவற்றுக்காக வாசகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றன.
எத்தனை எத்தனை தலைப்புகள்...! சமுதாயம், அரசியல், இலக்கியம், கல்வி, மொழி, ஆன்மிகம், அழைப்பியல், ஊழல், நீதி, சட்டம், குடும்பம், வணிகம்-ஏன் முஸ்லிம் திருநங்கைகளின் பிரச்னையையும்கூட- விட்டுவிடாமல் பேசியுள்ள பாங்கு இந்த நூலின் தனிச் சிறப்பு ஆகும். 50 தலைப்புகளில் 50 மின்னல்கள் உங்கள் இதய பூமியில் கருத்து மழை பொழியக் காத்திருக்கின்றன.
இறைவனும் இந்திய அரசும், இந்தியாவுக்குத் தேவை இறைவழிகாட்டுதல், மனிதச் சட்டங்களின் விபரீதம் போன்ற ஆக்கங்கள் இந்தியத் திருநாட்டின் சிக்கல்கள் தீரவேண்டும்; இந்திய மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என ஏங்கும் ஓர் இஸ்லாமிய உள்ளத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.
அதேபோல் ஒவ்வொரு துறை குறித்தும் தெறிக்கும் கருத்து மின்னல்கள் உங்கள் உள்ளங்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும்.
நூலாசிரியர் சிராஜுல் ஹஸன் நல்ல எழுத்தாளர். சிறந்த படைப்பாளி. இதழளாளர். கடந்த 33 ஆண்டுகளாய் சமரசம் இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார். எளிய - இனிய தமிழ்நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதை, கட்டுரை, கவிதை, இசைப்பாடல், குழந்தை இலக்கியம் ஆகிய துறைகளிலும் தொடர்ந்து தம் பங்களிப்பைச் செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் படைத்தளித்துள்ள இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையும் நடப்பியல் வாழ்வின் யதார்த்தங்களை எந்த ஒப்பனையும் போலித்தனமும் இன்றி வாசகர்கள் முன் வைக்கின்றது; வினாக்களை எழுப்புகிறது; விடை காணத் தூண்டுகிறது; சிந்திக்கச் சொல்கிறது; செயற்களத்திற்கு அழைக்கிறது. அடடா...! இந்தப் பிரச்னை பற்றி இதுவரை நாம் யோசித்ததே இல்லையே என்று கருதும் அளவுக்குப் பல்வேறு சிக்கல்களைத் தொட்டுக் காட்டுகிறது.
இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படுமேயானால் ஐயமின்றி இங்கே ஒரு தூய்மையான சமுதாயம் மலர்ந்துவிடும். சமூக மறுமலர்ச்சிக்காகப் பாடுபடும் அனைவரும் இந்த நூலைப் படிக்கவேண்டும்; தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் இந்தச் சின்ன மின்னல் சீரான சிந்தனை வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும் என்பது எங்கள் வேணவா.
Be the first to rate this book.