சீனா, அண்ணன் தேசமாக அன்பு குறையாமல் அறியப்பட்டாலும், தற்போதைய நிலைமைகள் அப்படி இல்லை. இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் தேசமாக, மிரட்டல் விடுக்கும் வம்பு நாடாக சீனா மாறி வருகிறது. அதனால், சீனா மீதான அபிப்பிராயம் நம்மிடத்தில் குறைந்திருக்கும் காலகட்டம் இது. ஆனால், சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் இந்தப் பகை நிலைமைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... உண்மையில் சீனா நம் சொந்த அண்ணன் தேசம்தான். அழகில், கட்டமைப்பில், பொருளாதார உயர்வில், வாழ்வியலில் சீனா நம் முன்னோடியாகவே விளங்குகிறது. ஒரு சுற்றுலாப் பார்வையாக அல்லாமல், சீனா குறித்த அத்தனை சுவாரஸ்யங்களையும் அழகு தமிழில் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர் சுபஸ்ரீ மோகன்.
சீனாவில் வாழ்வதற்கான வாய்ப்புகளைச் சொல்லி ஆரம்பிக்கும் நூல், சீனர்களின் குணாதிசயங்கள், விழாக்கள், ஆன்மிக ஈடுபாடுகள் என அத்தனை விதமான பார்வைகளையும் வெகு அழகாகப் பதிவு செய்கிறது. ரசனைமிகுந்த எழுத்துக்களுக்கும், பார்வைகளுக்கும் பக்கபலம் சேர்க்கும் விதமாக பொன்.காசிராஜனின் புகைப்படங்கள் மிகுந்த மெனக்கெடுதலோடு எடுக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழில் சரிவடைந்ததால், இப்போது பணி வாய்ப்புக்காக சீனாவுக்கு இந்தியர்கள் அதிகமாகச் செல்கிறார்கள். இத்தகைய காலகட்டத்தில் சீனா குறித்து முழுக்க அறிந்துகொள்ள இந்த நூல் அற்புதமான வழிகாட்டியாக விளங்கும்.
சீனர்களின் வரலாறும், பாரம்பரியமும், கலைகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடும் எல்லோரையும் ஈர்க்கக்கூடியவை. சுத்தம், நேரம் தவறாமை, பணியில் முழு ஈடுபாடு என சீன மக்களின் அத்தனைவிதமான பெருமைகளையும் வாழ்வியல் வழிகாட்டியாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. சாலை ஓரச் செடிகளில் இருக்கும் ரோஜாக்களை யாரும் பறிப்பதில்லை என்பது உட்பட இந்த நூலில் ஏராளமான அழகு ஆச்சர்யங்கள்! சுற்றுலா செல்பவர்களுக்குப் பயண வழிகாட்டியாகவும், பிறதேசம் அறியும் ஆர்வ மிகுதியாளர்களுக்கு சுவாரஸ்ய கிடங்காகவும், தொழில் நிமித்தம் செல்பவர்களுக்கு பக்க துணையாகவும் இந்த நூல் நிச்சயம் விளங்கும்.
Be the first to rate this book.