நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு எதிர்முனையில், முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி. இருவருக்குமிடையில் சேவகனாக, செயலாளனாக, பாதிரியாக, வளர்ப்பு மகனாக இருந்து அல்லாடும் கதைசொல்லி ஜோன் மயோல். கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் எஸ்டேட்டுடைய சொத்து நிர்வாகத்தில், அதன் பணவிவகாரங்களை முறைப்படுத்துவதில் மட்டுமல்ல அவனுடைய அல்லாட்டம்; சதை இச்சைக்கும் ஆன்மாவுக்குமான போராட்டத்தில் ஸென்யோர் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்தான். அவருடைய செயல்பாடுகள்மீது இவனுக்கு ஏற்படும் விமர்சனங்கள் அத்தனையுமே, தான் ஒரு பாதிரியாக இருக்கிறோம் என்ற போதம் காரணமாகவே வெளிப்படுகிறவை.
வில்லலோங்கா எழுதிச் செல்லும் பாணி அலாதியானது. கதை சொல்லும் போக்கிலேயே நாவலின் நடப்புக் காலத்திய ஓவியம், இசை, இலக்கியம் எனப் பல்வேறு கலைவடிவங்கள் குறித்து வெளிப்படையான விவாதங்களும் இடம்பெறுகின்றன. வாக்னர் பற்றியும் மொஸார்ட் பற்றியும் டச்சு குறுஓவியங்கள் பற்றியும் திறந்த விசாரணையும் விமர்சனங்களும் வெளியாகின்றன. விக்டர் ஹ்யூகோ, அலெக்ஸாண்டர் ட்யூமா என்று சமகால, முந்தையகால எழுத்தாளர்கள் பற்றிய கருத்துக்களும் பதிவாகின்றன. தமிழ்ச்சூழலில் ஜெயகாந்தனையும் தி. ஜானகிராமனையும் லா.ச.ராவையும் ஜி. நாகராஜனையும் அவர்களின் நேரடிப் பெயர்களுடன், படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிற ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்ன!
Be the first to rate this book.