கலை இலக்கியம் என்கிற அடிப்படைக் கோட்பாட்டினை மையாக வைத்து இயங்கிக் கொண்டிருந்த ‘கனலி’ இணையதளத்தைக் ‘கலை-இலக்கியச் சூழலியல்’ இணையதளமாக மாற்றியமைக்க முக்கியமான பங்காற்றியது ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’. அச்சிறப்பிதழைத் தற்போது “பூமி இழந்திடேல்” என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிடுகிறோம்.
சூழலியல்-காலநிலை மாற்றங்கள் என்பது தற்போது அறிவியலின் ஒருபகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. நாம் வாழும் இந்த பூமி தற்போது மிகப்பெரிய நெருக்கடியொன்றில் இருக்கிறது. இந்த நெருக்கடிகள் தொடர்ந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று, வரப்போகும் நம் எதிர்காலத் தலைமுறைக்கு, பூமி என்கிற நிலத்தின் வழியாகப் பெறும் எந்தப் பயனையும் பெறாமல் செய்துவிடும் என்பது திண்ணம். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. மனிதகுலம் சந்திக்கும் இந்த மாபெரும் சவால்களைப் பற்றிய புத்தகங்கள் மற்றும் தொகுப்புகள் தமிழ் அறிவுசார் சூழலில் பல்வேறு களப்பணியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதன் மாபெரும் தொடர்ச்சியாக இந்த “பூமி இழந்திடேல்” சூழலியல் - காலநிலைச் சிறப்பிதழ் தொகுப்பைக் கனலியின் வழியாகப் புத்தகமாக வெளியிடுவதில் கனலி மகிழ்ச்சியும் பெருமிதம் கொள்கிறது. இந்தத் தொகுப்பின் வழியே சூழலியல் - காலநிலை மாற்றங்கள் பற்றிய அறிதல் தமிழ் மக்களுக்கு கிடைத்தால், அதன்மூலம் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்தால் போதும், அதுவே இந்தத் தொகுப்பிற்குக் கிடைக்கும் மாபெரும் வெற்றியாக நாங்கள் கருதுவோம்.
சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழின் ஆசிரியர் அன்புத்தோழர் சு.அருண் பிரசாத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இந்த இரண்டு தலைப்புகளின் மீது அவர் செலுத்திவரும் ஆய்வும், ஆர்வமும் மிகவும் முக்கியமானது. தமிழ் அறிவுசார் சூழலில் இன்னும் மிகப்பெரிய உயரங்களை அவர் அடைவார் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும் இத்தொகுப்பில் பங்களிப்பு செய்து உதவிய அத்தனை எழுத்தாளர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும், கனலி இணையதளத்தில் சிறப்பிதழாக இது வெளிவந்தபோது இச்சிறப்பிதழை வாசித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட வாசகர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Be the first to rate this book.