முண்டாசுக் கவி, மகா கவி, புரட்சிக் கவி என்றெல்லாம் சொல்லும்போதே நமக்குள் துடிப்பு கிளம்பும்! பாரதியைப் பற்றி அறிமுகம் தேவையில்லை; அவர் ஒரு ஆச்சரியம், அபூர்வம். அவர் சாகாவரம் பெற்ற எழுத்துகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மகா கவி இன்ப இல்லத்தை நாடிப் போகவில்லை; கவிதை இல்லத்தில் குடியேறி சமூக சீர்திருத்தச் சமையலைப் படைத்தவர். பாரதி ஓர் ஆச்சரியம் தான்!
‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...’ என்று முழங்கிய பாரதி, ஐம்பூதங்களில் ஒன்றான தீ மீது பற்று கொண்டிருந்தவர். அதற்கு சான்றாக, ‘தீயே எமது உயிரின் தோழன், தீ இனிது, தீயே நீ சுடுகிறாய், தீக்குள் விரலை வைத்தாய் நந்தலாலா...’ உள்ளிட்ட கவிதை வரிகள், புதுமை சிந்தனை உடையதே ஆயினும், அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும் என்று முழங்கிய முண்டாசுக் கவிஞரின் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார், நுாலாசிரியர் கமலநாதன்.
புரட்சியின் உச்சக்கட்டமாய் பெண்மையை உயரப் பிடித்து, ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்...’ என்று ஆராதித்த பாரதி, ‘ஏழையென்னும் அடிமையென்னும் ஜாதியில் இழிவு கொண்ட மனிதர்கள் இந்தியாவில் இல்லையே...’ என்றார்.
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் எங்கேனும் பார்த்ததில்லை’ என்றார் பாரதி. இந்நுாலைப் படைத்த ஆசிரியர், ‘பாரதி போல் பூமிதனில் இனி எங்கும் பிறந்திட முடியாது’ என்ற புகழ்ச்சியின் உச்சத்தை வீரமாய் உணர்த்துகிறார்.
Be the first to rate this book.