ஆச்சரியத்தில் திகைத்து நிற்கிறேன். திரைப்படத்தின் சோகமான காட்சிகளைக்கண்டு கண் பட்டைகள் வீங்க அழுது, குனிந்து தனது பாவாடையில் கண்ணீரைத்துடைத்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியா, இப்படி நம் கைப்பிடித்து கடனா அணைக்கு மேலே உள்ள அத்திரி மலை உச்சிக்கு அழைத்துச்செல்கிறாள் ?
பாபநாசத்தில் அகஸ்தியர் அருவியில் நம்மைக் குளிப்பாட்டுகிறாள்.
மலை உச்சியில் இருக்கும் கல்யாணி தீர்த்த அருவியின் அருகே வாழும் கிருஷ்ணவேணி ஆச்சியிடம் திருநீறு பூச வைக்கிறாள்.
மணிமுத்தாறு, மாஞ்சோலை, நாலுமுக்கு, தேயிலை தோட்டங்களுக்கு அழைத்துச்சென்று குதிரை வெட்டி புல்வெளியில் புரள வைக்கிறாள்.கூடவே, கவனம்,கவனம்.. அட்டை பூச்சி கவனம் என்று பதறுகிறாள்.
பாபநாசம் சித்தி வீடு எனில், மணிமுத்தாறு எனக்கு அத்தை வீடு என்று குதூகலிக்கிறாள்.
களைத்துக்கீழிறங்கினால், “இந்தாங்க ..விவாக் காப்பி” என்று சூடான காபி தந்து, மனதை இதமாக்குகிறாள். அருகில் அமர்ந்து எம் எஸ்.சுப்புலட்சுமியின் அன்னமாச்சாரியா கீர்த்தனைகளைப் பாடி மேலும் பிரமிக்க வைக்கிறாள்.
"பாவ யாமி கோபாலபாலம் என்ற எம்.எஸ்.பாடல் தெரியுமா?" என்று சங்கீதத்தின் அரிச்சுவடி தெரியாத நம்மைப்பார்த்து கேள்வியெழுப்புகிறாள்.
இந்து..இந்துவா ? இதென்ன, எழுத்தில் என்னென்ன மாயமெல்லாம் செய்கிறாளே?
- இரா. நாறும்பூநாதன்
Be the first to rate this book.