வியாசரால் எழுதப்பட்ட வடமொழிப் புராணமான ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுவின் அவதாரக் கதைகளைக் கூறுவது. அதே வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதம், பாண்டவ-கௌரவர்களிடையிலான குருவம்ச பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும் ‘பாகவதப் பாரதம்’ என்ற காப்பியம் தமிழில் 1800-ஆம் ஆண்டுகளில் தமிழில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பது வியப்புக்குரிய செய்தி.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பநாப நாடார் இந்நூலை எழுதி இருக்கிறார். அந்தச் சுவடி காலவோட்டத்தில் நைந்த நிலையில், சுமார் 50 ஆண்டுகள் கழிந்து ஏசுவடியான், ராமசாமி நாடார், குப்பையாண்டி போன்றோரின் முயற்சியால் மறுபிரதி செய்யப்பட்டது. அந்த ஓலைச்சுவடியை சுவடியியல் ஆராய்ச்சியாளரான சிவ.விவேகானந்தன் குமரி மாவட்டத்தில் கண்டதால் இந்நூல் உருவாகி இருக்கிறது.
அந்த ஓலைச்சுவடியில், அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. விரைவில் அதனை சுவடியிலுள்ள செய்யுள் வடிவிலேயே நூலாக்கும் முயற்சியில் தில்லி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் சிவ.விவேகானந்தன் ஈடுபட்டு வருகிறார். அதற்கு முன்னதாக, தனது சுவடி ஆராய்ச்சிக்கு உறுதுணையாக, அதன் உரைநடை வடிவத்தை வெளியிட்டிருக்கிறார். அதுவே இந்நூல்.
மகாபாரதத்தில் போர்க்களத்தில் எதிரிகளாய் நின்ற உற்றார், உறவினரைக் கண்டு மெய்சோர்ந்து நின்ற அர்ஜுனனைத் தெளிவுபடுத்த பகவத்கீதையை பரந்தாமனான கிருஷ்ணன் உபதேசிக்கிறான். அந்த இடத்தை சற்றே மாற்றி, பகவத்கீதைக்குப் பதிலாக, தனது அவதார மகிமைகளை அர்ஜுனனுக்கு கிருஷ்ணரே கூறுவதுபோல, பாகவதத்தின் கிருஷ்ணாவதாரம் தவிர்த்த ஒன்பது அவதாரங்களின் கதைகளைக் கூறுவதாக, பாகவதப் பாரதம் அமைந்திருக்கிறது.
அதேபோல, வியாச பாரதத்தில் உள்ள சில நிகழ்வுகளும் இந்த ஓலைச்சுவடி காப்பியத்தில் மாற்றப்பட்டிருக்கின்றன. மகாபாரதக் கதையின் மூலம் மாறுபடாதபோதும், கதாசிரியரின் கற்பனைக்கு ஏற்றவாறு பல இடங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன.
பாரத நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எந்த மொழியிலும் மகாபாரத காப்பியத்தின் செல்வாக்கு காணப்படுகிறது. அதுபோலவே குமரி மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மகாபாரதத்தின் தாக்கத்தால் உருவான ஓலைச்சுவடி பாகவதப் பாரதம். அதை தனது கடுமையான ஓராண்டு உழைப்பால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு இனிய வரவாகப் படைத்திருக்கிறார் இந்நூலாசிரியர். இவரது ஓலைச்சுவடி நூற்பதிப்புக்காகவும் காத்திருப்போம்.
Be the first to rate this book.