சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம். அப்போது உதவியது, இப்போது சாத்தியமா? நாடாளுமன்றத்தை அச்சுறுத்தும் செயல் அல்லவா இது? ஜனநாயகத்துக்கு எதிரான பிளாக்மெயில் அல்லவா? லோக்பால் வந்துவிட்டால் ஊழல்கள் எல்லாம் ஒழிந்துவிடுமா? தாக்குதல்களும் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் பொங்கி வந்தன. மற்றொரு பக்கம், அண்ணாவின் போர் முழக்கத்துக்கு இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் லட்சக்கணக்கான சாமானியர்கள் திரண்டு வந்தார்கள். நடைபெற்றது நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் எதிரான மாபெரும் யுத்தம். சத்தியத்துக்கும் ஊழலுக்கும் எதிரான தர்ம யுததம். எனவேதான் அண்ணா ஹசாரேவின் வெற்றியை ஜனநாயகத்தின் வெற்றியாகவும் மக்கள் சக்தியின் வெற்றியாகவும் இன்று இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ‘இன்றைய காந்தி’ என்ற புகழ்பெற்ற நூலின்மூலம் காந்தி தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவான பதிலை அளித்துள்ள ஜெயமோகன், இந்தப் புத்தகத்தின்மூலம் அண்ணா ஹசாரேவின் போராட்டம் பற்றிப் பரப்பப்பட்டிருக்கும் அனைத்து அவதூறுகளுக்கும் தெளிவான பதிலை முன்வைக்கிறார். அத்துடன் காந்தியப் போராட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மிக அழகாக விளக்குகிறார். ஊழலை எதிர்க்கும், ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் அவசியமாகப் படிக்கவேண்டிய புத்தகம் இது.
Be the first to rate this book.