செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்!
உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப் பன்மடங்கு பெருக்கியிருந்த பாபிலோனியச் செல்வந்தர்களின் வெற்றி இரகசியங்களை, ஜார்ஜ் எஸ். கிளேசன், சுவாரசியமான கதைகளின் வடிவில் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இன்றளவும் விற்பனையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற இந்நூல், சிக்கனம், சேமிப்பு, பாதுகாப்பான முதலீடு, கடின உழைப்பு, நேர்மை போன்ற அடிப்படை விஷயங்களின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
ஜார்ஜ் சாமுவேல் கிளேசன், 1874ம் ஆண்டு நவம்பர் 7ம் நாளன்று மிசௌரி மாநிலத்திலுள்ள லூயிசியானா நகரில் பிறந்தார். நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், ஸ்பானிய-அமெரிக்கப் போரின்போது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். பதிப்புத் துறையில் தன் நெடுங்காலப் பணியைத் தொடங்கிய அவர், கொலராடோ மாநிலத்திலுள்ள டென்வர் நகரில் ‘கிளேசன் மேப் கம்பனி’ என்ற பதிப்பகத்தைத் தோற்றுவித்து, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான முதல் சாலை வரைபடங்களைப் பதிப்பித்தார். 1926ல், சிக்கனம் மற்றும் பொருளாதார வெற்றி பற்றிய பல தொடர்ச்சியான துண்டு வெளியீடுகளை அவர் முதன்முதலாக வெளியிட்டு அவற்றைப் பிரபலமாக்கினார். அவற்றில் அவர் தன்னுடைய ஒவ்வொரு கருத்தையும், பண்டைய பாபிலோனைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டக் கதைகளைப் பயன்படுத்தி விளக்கினார். அந்தத் துண்டு வெளியீடுகள் பெரும் எண்ணிக்கையில் வங்கிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. அவை இலட்சக்கணக்கானோரிடையே பிரபலமாயின. அவற்றில் மிகப் பிரபலமானது ‘பாபிலோனின் மிகப் பெரிய செல்வந்தர்’ என்ற வெளியீடாகும். அக்கதைதான் இந்நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. இந்த ‘பாபிலோனியக் கதைகள்’, உத்வேகமூட்டுகின்ற ஒரு நவீன இலக்கியமாக ஆகியுள்ளன.
Be the first to rate this book.